Thursday, October 8, 2026

இரகசியம் - பரகசியம் (16.06.2024)


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு இன்று மீண்டும் வவுனியாவில் கூடுகின்றது.

கடந்த மத்திய குழுக் கூட்டத்தின் அதே நிகழ்ச்சி நிரல்தான் இன்றைய கூட்டத்துக்குமான அறிவித்தலிலும் காட்டப்பட்டுள்ளது.

கட்சிக்கு எதிரான வழக்கு விடயம், ஜனாதிபதித் தேர்தல் ஆகியவையே நிகழ்ச்சி நிரலில் அடக்கப்பட்டுள்ளன.

கடந்த மத்திய குழுக் கூட்டத்தில் வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் திட்டத்திற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. அதனால் பொது வேட்பாளர் திட்டத்தை ஆதரிக்கும் ஓரிருவர் தங்கள் நிலைப்பாட்டை கூட்ட அறிக்கையில் பதியக் கேட்டமையுடன் அடங்கிவிட்டனர்.

ஆனால் இன்றைய கூட்டத்தில் அந்தக் கருத்தை வலிமையாக முன்வைக்கும் திட்டம் அவர்களுக்கு இருப்பதாக ஒரு வட்டாரம் தெரிவித்தது.

எனினும், தமிழ் ஊடகம் ஒன்றுக்கு தமிழரசின் மூத்த தலைவர் இரா.சம்பந்தன் நேரடியாக வழங்கிய செவ்வி ஒன்று இன்று காலை பிரசுரமாக இருப்பதாகத் தெரிகின்றது.

பொது வேட்பாளர் விடயத்துக்கும் சம்பந்தனின் இறுக்கமான பதில் அதில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்று காலை மத்திய குழு கூடும்போது சம்பந்தனின் அந்தச் செவ்வி கூட்ட உறுப்பினர்கள் மத்தியில் வெளியாகி ஊடுருவி இருக்கும். அதனால் பொது வேட்பாளர் சார்பு நிலைப்பாடு இன்று கூட்டம் ஆரம்பிக்க முன்னரே நீர்த்துப் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கட்சிக்கு எதிரான வழக்குத் தொடர்பில் இன்றைய கூட்டத்தில் அதிகம் பேசுவதற்கு விடயம் இருக்காது என்றே நினைக்கிறேன். அடுத்த மாதம், அடுத்த வழக்கு தவணையின் பின்னர்தான் அதில் ஏதும் முன்நகர்வுகளை எதிர்பார்க்க முடியும்.

***

நரேந்திர மோடியின் புதிய அரசில் மீண்டும் வெளிவிவகார அமைச்சர் பதவியை ஏற்றிருக்கும் ஜெய்சங்கர் வரும் இருபதாம் திகதி கொழும்பு வருகின்றார் என ஒரு செய்தி வட்டாரம் தெரிவித்தது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் களைகட்டி உள்ள இந்தச் சமயத்தில் இந்திய வெளியுறவு அமைச்சரின் விஜயம் முக்கியத்துவம் பெறுகின்றது. அதைவிட இந்தப் பயணத்தின் போது இலங்கையில் அவர் யார், யாரைச் சந்திக்கப் போகின்றார் என்பது மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறும் எனக் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

தமிழர் தரப்பில் அவர் யாரையும் சந்திப்பாரா அல்லது வினையே வேண்டாம் என்று தமிழ் பிரதிநிதிகளை சந்திக்காமல் அவர் தவிர்த்து விடுவாரா என்பவை அடுத்து வரும் தினங்களில் தெரியவரும். பொறுத்திருந்து பார்ப்போம்.

you may also like