- by Editor
- 1 year ago
இரகசியம் - பரகசியம் (23.02.2024)
இலங்கைத் தமிழரசுக் கட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பாக ஆராய்வதற்கான கூட்டம் ஒன்று, கிளிநொச்சியில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகின்றது.
பழைய மத்திய குழுவின் கூட்டத்தைத்தான் இன்று கூட்டுவதாக இருந்தது. அப்படிப் பழைய மத்திய குழுவை உத்தியோகபூர்வமாகக் கூட்டுவது, தற்போதைய சட்ட நெருக்கடிகளை மேலும் பாதிப்படைய வைக்கலாம் என்று ஆலோசனை கூறப்பட்டமையால், கட்சிப் பிரமுகர்களின் உத்தியோகப்பற்றற்ற ஆலோசனைக் கூட்டமாக அதை நடத்தி முடிக்கத் தீர்மானிக்கப்பட்டது என அறிய வந்தது. பொறுப்பான - தந்திரோபாயமான - நகர்வுதான் அது.
அதே பாணியில் சிந்தித்து, இப்போதைய நெருக்கடிக்கு இணக்கமான - முரண்பாடற்ற - ஒரு தீர்மானத்திற்கு இன்றே வருவார்களேயானால், வரும் 29ஆம் திகதி வழக்குகளின் முதல் தவணையின் போதே, இந்தப் பிரச்சுனையைச் சுமுகமாகத் தீர்த்து விட வாய்ப்புண்டு . அது தலைவர்களின் Wisdom - அறிவு ஞானத்தை - பொறுத்தது.
வீம்புக்கு மல்லுக் கட்டினால், நிதியும் வீண். நேரமும் பாழ். கட்சியின் எதிர்காலமும் கேள்விக்குறி.
கிளிநொச்சியில் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ள பின்னணியில், இன்றைய கூட்டத்தில் சுமந்திரன் பங்கு பற்றார் என ஊகித்து, சில தினங்களுக்கு முன்னர் எழுதியிருந்தேன். தமது குடும்ப நிகழ்ச்சி நிரல் கருதி இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் தாம் கலந்து கொள்ள முடியாமல் இருப்பதாகத் தம்மைக் கூட்டத்துக்கு அழைத்தவர்களிடம் சுமந்திரன் கூறியிருக்கின்றார் என்று தெரிகின்றது.
இந்தக் கூட்டத்துக்கு சுமந்திரன் முக்கியமில்லைதானே..! தமிழரசுக் கட்சியின் இந்த வழக்குகளில் சுமந்திரன் முன்னிலையாகவே முடியாது என்று சட்ட அறிவுடன் உரைத்த மற்றொரு ஜனாதிபதி சட்டத்தரணி - அதுவும் கட்சியின் சட்டத்துறை செயலாளராக - இருக்கின்றமையினால் இந்தப் பிரச்சினையை 'ப்பூ...!' வென்று அவர் ஊதித் தள்ளி விடுவார் எனக் கட்சி முழுமையாக நம்பலாம்.
இன்றைய கூட்டத்திற்கு சாணக்கியனும் வர மாட்டார். அவர் இந்தியாவில் ஒரு நிகழ்வுக்குச் சென்று விட்டார்.
எனினும் பெப்ரவரி 19 நடக்கவிருந்த கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்திற்கும் தேசிய மாநாட்டுக்கும் யாழ் நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கிய பீற்றர் இளஞ்செழியன் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்குபற்றுவார் எனத் தெரிகின்றது.
இன்று கூட்டம் நடைபெறவிருக்கையில், நேற்று எமது இணையத்தள வாசகர் ஒருவர் வெளிநாட்டிலிருந்து அழைப்பு எடுத்தார். தினசரி பத்திரிகையை அனுப்பும் தொலைபேசி இலக்கத்துக்கு whatsapp மூலம் தொடர்பு கொண்டார். என்னை யார் என்று கேட்டார். அறிமுகப்படுத்தினேன்.
அவர் வயதில் மூத்தவர். தந்தை செல்வா - அமீர் காலத்துத் தமிழரசு விசுவாசி போலும். இந்த நெருக்கடி சமயத்தில் தமது கட்சிக்கு உதவ வேண்டும் என்று நினைத்திருப்பார் என நினைக்கிறேன். கட்சி விடயங்கள் குறித்து நான் அதிகம் எழுதுவதால் என் கருத்தை - ஆலோசனையை - அறிய முற்பட்டார் என எண்ணுகிறேன். அவரது கேள்வி என்னைத் தூக்கி வாரிப் போட்டது.
''தம்பி..! தமிழரசுக் கட்சிக்கு இந்த நெருக்கடி சமயத்தில் உதவ வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் ஒரு சிக்கல். யாருக்கு உதவுவது என்பதுதான் கேள்வி. வழக்குப் போட்டவர்களும் கட்சிக்காரர்கள்தான். எதிராளிகளும் கட்சிக்காரர்கள்தான். கட்சியில் இருந்தபடியே கட்சியை யாப்பின்படி ஒழுங்காக நடத்தச் சொல்லி வலியுறுத்துபவர்களை ஆதரிப்பதா? அல்லது யாப்பின்படி இல்லாமல் தான்தோன்றித்தனமாக நடக்கும் நிர்வாகிகளை ஆதரிப்பதா? யாருக்கு உதவி செய்வது?'' - இதுதான் அந்த அன்பரின் உரிமையுடன் கூடிய கேள்வியின் சுருக்கம்
எனக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை ஒரு 'சமாளிஃபிகேஷன்' விட்டேன்.
''இரண்டு தரப்புகளும் கட்சிக்காரர்கள்தான். இன்று அடிபடுவார்கள். நாளை அரவணைத்துக் கொள்வார்கள்'' - என்று கூறிச் சமாளித்தேன். என் பதில் அவருக்கு திருப்தி தரவில்லை என நினைக்கிறேன்.
சிறீதரன், சுமந்திரன், மாவை - மூவரின் தொலைபேசி இலக்கங்களையும் அவருக்குப் போட்டுவிட்டேன். அவர்களுடன் அவர் பேசினாரோ என்னவோ தெரியவில்லை.
ஆனால் தமிழரசுக் கட்சிப் பிரச்சினை தொடர்பில் அதன் ஆதரவாளர்கள் பலருக்கும் இந்த வெளிநாட்டு அன்பர் போன்ற குழப்ப நிலைதான் என்பதை நான் அறிவேன்.
விடயம் நீதிமன்றுக்கு போய்விட்டது. இயன்றவரை யாப்புப் படி கட்சியை நடத்துவோம் என்று வாக்குறுதி அளித்து, விடயத்தை முன்னெடுப்பதுதான் சாலச் சிறந்தது.
யாப்புப்படி இல்லாமல், தன்னிஷ்டப்படி கட்சியை நடத்திய மாவையின் கையில் இருந்து கட்சி விடுபட்டால், கட்சியை யாப்பின் அடிப்படையில், விடயங்களுக்கு அமைவாக, கொண்டு செல்வது புதிய நிர்வாகிகளுக்கு கஷ்டமாக இருக்காது என்றுதான் நினைக்கின்றேன்.
ஆனால் கட்சியின் இப்போதைய துரதிர்ஷ்ட நிலைமையை ஒப்புக்கொண்டு, இறங்கி வந்து, சமரசம் செய்து, பின்னர் கட்சியைப் பலப்படுத்துவதுதான் கட்சிக்கான வழிகாட்டல் அழகாக இருக்க முடியும்.
கட்சியின் செல்நெறி எப்படி அமையப் போகின்றது என்பதை இன்றைய கூட்டத்தின் போக்கில் ஓரளவு எடை போடக்கூடியதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
*****
இந்திய தூதுவரும், துணைத் தூதுவரும் நேற்று முன்தினம் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நேரில் அழைத்துப் பேச்சு நடத்தினர்.
அந்தச் சந்திப்புக்கான ஒழுங்கு நடைபெற்ற சமயமே இருவரும் - தூதுவரும், துணை தூதுவரும் - சுமந்திரனைச் சந்திப்பதற்கான நேரமும் ஒழுங்குபடுத்தப்பட்டதாகத் தெரியவந்தது. அந்தச் சந்திப்பு வரும் 26 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை நடைபெறுகிறது.
தமிழரசுக் கட்சியின் இரண்டு எம்.பிக்களையும் இந்திய தூதுவர் சந்திக்க உயர்நிலை அதிகாரிகள் ஒழுங்கு செய்தார்கள். ஆனால் ஓர் எம். பியின் சந்திப்புக் குறித்து மற்ற எம்.பிக்கு தகவல் வெளியிடப்படவில்லை என்பதுதான் இதில் பொதிந்து கிடக்கும் ராஜதந்திரம்.