Thursday, October 8, 2026

சுரேஷ் சலேவின் ரீட் மனு - இடைக்கால மனுக்கள் ஜூலை 17க்கு ஒத்திவைப்பு


உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தம்மை கைது செய்து தடுப்புக் காவலில் வைப்பதற்கு எதிராக அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள ரீட் மனுவுக்கு ஆதரவாக சமர்ப்பணங்களை முன்வைக்க அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து இடைக்கால மனுக்களையும் ஜூலை 17ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வணக்கத்திற்குரிய பெங்கமுவே நாலக தேரர், தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் அழைப்பாளர் வைத்தியர் குணதாச அமரசேகர உள்ளிட்ட பல தரப்பினரால் இந்த இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

குறித்த மனுக்கள் இன்று (10) மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரொஹான் அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதன்போது, எதிர்மனுதாரர்கள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், பிரதான ரீட் மனு தொடர்பாக நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்த பின்னரே இடைக்கால மனுக்களை பரிசீலிப்பதற்கான சாத்தியம் ஏற்படும் என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதேவேளை, இடைக்கால மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணிகளான வி. கே. சொக்ஸி, மனோஹர டி சில்வா, கிரிஷ்மால் வர்ணசூரிய மற்றும் அசோக் பரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள், குறித்த வழக்கு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ள முக்கியமான விடயம் என்பதால், தலையிட்டு தங்களது கருத்துக்களை முன்வைக்க அனுமதி வழங்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

எனினும், மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹான் அபேசூரிய, மனுதாரர் சுரேஷ் சலே சார்பில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தனவின் சமர்ப்பணங்கள் நிறைவடைந்த பின்னரே இடைக்கால கோரிக்கைகள் தொடர்பில் பரிசீலிக்க முடியும் என அறிவித்தார்.

you may also like