- by Editor
- 2 years ago
சீன பாதுகாப்பு ஆலோசகர் - இலங்கை பாதுகாப்பு பிரதியமைச்சர் சந்திப்பு:
-
- by Editor,
- 3 months ago
- in இலங்கை செய்திகள்
இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் தூதரகத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் Fu Xiao, பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) அவர்களை நேற்று (15) கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து இரு தரப்பினரும் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இலங்கை ஆயுதப்படைகளின் இராணுவப் பயிற்சி மற்றும் தொழில்முறை திறன் மேம்பாட்டிற்கு சீனா நீண்டகாலமாக வழங்கி வரும் ஒத்துழைப்பை பாதுகாப்பு பிரதியமைச்சர் பாராட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நில அடிப்படையிலான படை நிலைப்பாட்டிலிருந்து கடல்சார் கள விழிப்புணர்வை (Maritime Domain Awareness) வலுப்படுத்தும் நோக்கில் இலங்கை மேற்கொண்டு வரும் மூலோபாய மாற்றத்தையும் அவர் விளக்கியுள்ளார். அதேபோல், நாட்டின் நடுநிலையான அணிசேரா வெளிநாட்டு கொள்கைக்கான அர்ப்பணிப்பையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
எதிர்கால ஒத்துழைப்பிற்கான முக்கிய துறைகளாக கடல்சார் பாதுகாப்பு, போதைப்பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல் மற்றும் மனிதக் கடத்தலை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு, பயிற்சி மற்றும் ஒப்புருவாக்க (Simulation) நிகழ்ச்சிகள், அத்துடன் அனர்த்த முகாமைத்துவம் ஆகியவை இரு தரப்பினராலும் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் சீன தூதரகத்தின் பிரதிப் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் கடற்படை ஆலோசகர் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.