- by Editor
- 2 years ago
சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வுக்கு மக்கள் ஆணையைக் கோருவதை கைவிட்டது பொதுக் கட்டமைப்பு!
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
வடக்கு - கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்துக்குச் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வுக்குத் தமிழ் மக்களின் ஒன்றுபட்ட ஆணையைத் தமிழ்ப் பொது வேட்பாளர் மூலம் இந்த ஜனாதிபதித் தேர்தலில் கோரும் திட்டத்தைத் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு கைவிட்டுள்ளது எனத் தெரியவருகின்றது.
அதற்குப் பதிலாக இந்தத் தேர்தலைத் தமிழர் தேசமாகத் தமிழ் மக்கள் ஒன்று திரளுவதை வெளிப்படுத்தும் சந்தர்ப்பமாகப் பயன்படுத்துவதற்குப் பொது கட்டமைப்பு தீர்மானித்திருக்கின்றது எனவும் அறியப்படுகின்றது.
தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் கூட்டம் நேற்றுப் பகல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றபோது தமிழ்ப் பொது வேட்பாளரின் சார்பில் முன்வைக்கப்படவிருக்கும் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்துப் பூர்வாங்க நிலையில் ஆராயப்பட்டது என அறியவந்தது.
அந்த விஞ்ஞாபனத்திலேயே இந்த ஜனாதிபதித் தேர்தலைத் தமிழ் மக்களின் ஆணையைக் கோரும் ஒரு விடயமாக சில தரப்புக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன எனவும், தேர்தலைத் தமிழர் தேசமாக ஒன்றுபடுவதற்கான ஓர் அடையாளமாகப் பயன்படுத்தலாம் என்று அந்தத் தரப்புக்கள் வலியுறுத்தின எனவும் தெரிகின்றது.
அந்த நிலைப்பாடு பலரின் அதிருப்திக்கு மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது எனவும் சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேசமயம் தமிழரின் கருத்தறியும் சர்வஜன வாக்கெடுப்பையும் தமிழ்ப் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கோர வேண்டும் என்ற சிவாஜிலிங்கத்தின் கோரிக்கையும் நேற்று அவர் நேரில் பிரசன்னமாகி வலியுறுத்திய போதிலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என அறியவந்தது.