Friday, October 9, 2026

கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் அமைதியின்மை - காயமடைந்த கைதி உயிரிழப்பு


கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (07) இரவு ஏற்பட்ட அமைதியின்மையின்போது காயமடைந்த கைதிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த 11 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் ஒருவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சிறைச்சாலைக்கு வெளியிலிருந்து பொதியொன்று உள்ளே வீசப்பட்டதாகவும், அதனை சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைப்பற்றியதைத் தொடர்ந்து, சிறைச்சாலைக்குள் இருந்த கைதிகள் குழுவொன்று அமைதியின்மையில் ஈடுபட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து ஏற்பட்ட பதற்ற நிலைமை தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய ஒன்பது கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறைச்சாலையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேற்றிரவு ஏற்பட்ட நிலைமையை கட்டுப்படுத்துவதற்கும் முப்படையினரின் ஒத்துழைப்பு பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இன்று (08) கைதிகளை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என சிறைச்சாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

you may also like