Saturday, October 10, 2026

கொம்யூனிஸ்டுகள் கோழைகள்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு


இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்டுகள் முழு கோழைகள் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் நேற்று விமர்சித்தார்.

யு.பி.ஐ. பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக மார்க்சிஸ்ட் கொம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி., ஜான் பிரிட்டாஸ் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றார் என குறிப்பிட்டு அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜூன் 5 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி திருத்த மசோதா 2026 ஐ நிராகரிப்பதற்கான தீர்மானத்தை முன்மொழிந்து மார்க்சிஸ்ட் கொம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி., ஜான் பிரிட்டாஸ் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

முன்னதாக, பேசிய அவர், அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக பிரேசிலைப் போன்று யு.பி.ஐ. பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க அரசு முடிவு செய்துள்ளதாக விமர்சித்தார்.

இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையானது இலவச பொதுச்சேவையாக உருவாக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டார். இடையில் அவரின் பேச்சுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் வெளிநடப்பு செய்தார்.

இதன் பிறகு அவர் முன்மொழிந்த தீர்மானத்திற்கு பதில் அளித்து நிர்மலா சீதாராமன் உரையாற்றுகையில்,

''நான் பேசும் ஒரு வரியையாவது கேட்க வேண்டும் என்றால் தயவு செய்து அவையில் இருங்கள். ஆதாரங்கள் எதுவுமின்றி அனைவரின் மீதும் அவதூறுகளை அள்ளி வீசுவது இவர்களின் (கொகம்யூனிஸ்ட்) பாணி.

இதுபோன்று எதையாவது செய்துவிட்டு நான் பேச வேண்டும், அது என் உரிமை என கோரிக்கை வைப்பார்கள். ஆனால், உண்மையில் அவர்களுக்கு புள்ளி விவரங்களுடன் பதில் அளித்தால், அதனை அவர்கள் ஏற்பது இல்லை. அவர்களுக்கு அதனை எதிர்கொள்ள தைரியமில்லை. கோழைகள்.

நாட்டில் உள்ள கொம்யூனிஸ்டுகள் முழு கோழைகள், இந்த உறுப்பினர் அதனை நிரூபித்துவிட்டார். உண்மையை அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. ஆனால், காலம் தாழ்த்துவதற்காக கூச்சலிடுவார்கள்.'' என்று பேசினார்.


you may also like