Saturday, October 10, 2026

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு திடீரென இடைநிறுத்தம்!


முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் இதுவரை 40 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் கட்ட அகழ்வுப் பணி இன்றுடன் நிறுத்தப்பட்டுள்ளது என்று சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார்.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு நடவடிக்கையின் ஒன்பதாம் நாள் பணி இன்று பிற்பகலுடன் நிறுத்தப்பட்டது. இன்றுடன் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணி நிறைவடைந்துள்ளது. இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி இரண்டு கட்டங்களாக இடம்பெற்றிருந்தது. முதல் கட்டம் பதினொரு நாட்களும், இரண்டாம் கட்டம் ஒன்பது நாட்களுமாக மொத்தம் இருபது நாட்கள் அகழ்வுப் பணி நடைபெற்றது.

இன்றுடன் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. கடந்த தினங்களில் நடைபெற்ற ஸ்கான் இயந்திரப் பரிசோதனை மூலம் குழிக்கு மேற்குப் பக்கமாக இரண்டு மீற்றர் நீளத்துக்கு உடலங்கள் காணப்படுகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது.

மீண்டும் அகழ்வுப் பணி அடுத்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி நடைபெறத் திட்டமிடப்பட்டிருக்கின்றது.

இன்றுவரை மொத்தமாக 40 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக எடுக்கப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் தமிழீழ விடுதலைப் புலிகளுடைய ஆண், பெண் போராளிகளுடைய வித்துடல்கள் என நம்பப்படுகின்றது.

அத்தோடு இப்பிரதேசம் 1984 ஆம் ஆண்டு இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டுக்குள் இருந்த பிரதேசமாகக் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் இந்த வீதி இருக்காத நிலையில் மக்கள் 2012 ஆம் ஆண்டு குடியேறியதன் பிற்பாடு வீதி செப்பனிடப்பட்டுள்ளது.

ஆகவே, இந்தப் புதைகுழி 2012 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்துக்குரிய புதைகுழியாக இருக்கின்றது. அத்தோடு அடுத்தகட்ட அகழ்வுப் பணிக்குத் தேவையான நிதி வசதிகள், அதற்கான பாதீடுகளைத் தயார் செய்து நீதிமன்றில் தாக்கல் செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி இந்த வழக்கு இடம்பெறவுள்ளது. அத்தோடு பல சான்றுப் பொருட்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

உடலங்கள் கொண்டுவந்து போடப்பட்டு 3 மீற்றர் அகலம் , 14 மீற்றர் நீளம் கொண்ட குழிக்குள் புதைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் வீதிப் பக்கமாக இரண்டு மீற்றர் நீளத்துக்கும் 1.5 மீற்றர் ஆழத்துக்கும் அகழப்படலாம் என கூறப்படுகின்றது.

இதுவரை எந்தவித அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்படவில்லை. ஆனால், பேராசிரியர் ராஜ் சோமதேவ இடைக்கால அறிக்கையை டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முதல் சமர்ப்பிப்பதாக நீதிமன்றில் கூறப்பட்டது.

நிதி வழங்கலில் பிரச்சினைகள் இருப்பதாக அறிகின்றோம். இது தொடர்பாக நீதிமன்றத்தில் இன்று கலந்துரையாடபட்டிருந்தது. இது தொடர்பாக ஒரு கட்டளையும் வழங்கப்பட்டிருக்கின்றது. அரச அதிபரின் காரியாலயத்திலிருந்து ஒருவர் இதற்குப் பொறுப்பாக நியமிக்கப்படவுள்ளார்." - என்றார்.

.........

you may also like