Monday, October 12, 2026

சர் கார்பீல்ட் சோபர்ஸுக்கு அஞ்சலி - LPL போட்டிகளில் ஒரு நிமிட மௌன அஞ்சலி


மறைந்த மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் ஜாம்பவான் சர் கார்பீல்ட் சோபர்ஸுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கொழும்பு SSC மைதானத்தில் இன்று நடைபெறும் 2026 லங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டிகளுக்கு முன்பாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், LPL தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளின் வீரர்களும் கருப்புக் கைப்பட்டைகளை அணிந்து விளையாடுவார்கள் என இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அறிவித்துள்ளது.

சர் கார்பீல்ட் சோபர்ஸின் மறைவைத் தொடர்ந்து வெளியிட்ட அறிக்கையில், அவரை கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த சகலதுறை வீரர்களில் ஒருவராக இலங்கை கிரிக்கெட் சபை பாராட்டியுள்ளது.

இலங்கை கிரிக்கெட்டுடன் சர் கார்பீல்ட் சோபர்ஸுக்கு இருந்த நெருக்கமான தொடர்பையும் SLC நினைவுகூர்ந்துள்ளது. குறிப்பாக, 1983 கிரிக்கெட் உலகக் கோப்பை காலப்பகுதி உட்பட, 1980களின் ஆரம்பத்தில் அவர் இலங்கை தேசிய அணியின் பயிற்சியாளராகப் பணியாற்றியமை குறிப்பிடப்பட்டுள்ளது.

“இந்த துயரமான இழப்பின் நேரத்தில், இலங்கை கிரிக்கெட் சபையும் நாட்டின் முழு கிரிக்கெட் சமூகமும் சர் கேரி சோபர்ஸின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது” என SLC தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், சர் கார்பீல்ட் சோபர்ஸின் சிறப்புமிக்க கிரிக்கெட் மரபு, உலகம் முழுவதும் உள்ள பல தலைமுறை வீரர்களுக்கு தொடர்ந்தும் ஊக்கமளிக்கும் எனவும் இலங்கை கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.

you may also like