Friday, October 9, 2026

சாரதிகளுக்கு புதிய கட்டுப்பாடு - அமுலுக்கு வரும் 'புள்ளி குறைப்பு முறைமை'


இலங்கையில் வீதிப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், வாகன சாரதிகளுக்கான ‘புள்ளி குறைப்பு முறைமை’ (Demerit Points System) எதிர்வரும் செப்டம்பர் மாதம் முன்னோடி திட்டமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வீதிகளில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதை கட்டுப்படுத்தவும், சாரதிகளின் ஒழுக்கத்தை மேம்படுத்தவும் கடுமையான சட்ட அமலாக்கம் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இலங்கையில் கடந்த ஆண்டு வீதி விபத்துகளில் 2,750 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் உந்துருளி சாரதிகளும், பாதசாரிகளும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிய முறைமையின் கீழ், ஒவ்வொரு சாரதி அனுமதிப்பத்திரத்திற்கும் (Driving Licence) 24 புள்ளிகள் வழங்கப்படும். போக்குவரத்து விதிமுறைகளை மீறும் போதெல்லாம் இந்த புள்ளிகள் குறைக்கப்படும்.

தொடர்ச்சியாக விதிமீறலில் ஈடுபட்டு புள்ளிகளை இழக்கும் சாரதிகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் (Department of Motor Traffic Sri Lanka) நிலவிய நிர்வாக சிக்கல்கள் மற்றும் முறைகேடுகள் காரணமாக இந்த திட்டம் இதுவரை தாமதமடைந்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.

தற்போது ஊழலைக் கட்டுப்படுத்தவும், செயல்திறனை அதிகரிக்கவும் ‘இ-மோட்டாரிங்’ (e-Motoring) டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

you may also like