Friday, October 9, 2026

கன்ட்ரி இசையின் ராணி விடைபெற்றார்


புகழ்பெற்ற சர்வதேச கன்ட்ரி இசைப் பாடகியும் பாடலாசிரியருமான Dolly Parton தனது 80ஆவது வயதில் காலமானார்.

அவரது மறைவு தொடர்பான அறிவிப்பை அவரது மருமகனான பிரையன் சீவர் (Bryan Seaver), குடும்பத்தின் சார்பில் சமூக ஊடகங்கள் ஊடாக வெளியிட்டுள்ளார். குறுகிய காலமாக புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில் டோலி பார்ட்டன் உயிரிழந்ததாக அவரது பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

சுமார் ஏழு தசாப்தங்களாக இசைத்துறையில் பயணித்த டோலி பார்ட்டன், 11 கிராமி விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை வென்றுள்ளதுடன், உலகளவில் 100 மில்லியனுக்கும் அதிகமான இசைத்தட்டுகளை விற்பனை செய்துள்ளார்.

“Jolene”, “I Will Always Love You” மற்றும் “9 to 5” உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற பாடல்களை உருவாக்கிய அவர், தன்னை முதன்மையாக ஒரு பாடலாசிரியராகவே அடையாளப்படுத்திக் கொண்டார்.

பாடல் எழுதுவதை தனது எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் ஒரு வழியாகவும், தனக்கான ஒரு வகையான “சிகிச்சையாகவும்” அவர் கருதியதாக பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளார்.

இசைத்துறைக்கு அப்பால் நடிப்பு, வர்த்தகம் மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளிலும் டோலி பார்ட்டன் தனக்கென தனித்துவமான அடையாளத்தை ஏற்படுத்தியிருந்தார்.

குறிப்பாக, அவர் நிறுவிய Imagination Library திட்டத்தின் மூலம் உலகின் பல பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு இலவசமாகப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை நூற்றுக்கணக்கான மில்லியன் புத்தகங்கள் குழந்தைகளுக்கு சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

“கன்ட்ரி இசையின் ராணி” என உலகளவில் போற்றப்பட்ட டோலி பார்ட்டனின் மறைவு, இசை மற்றும் பொழுதுபோக்குத் துறைக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது.

you may also like