Sunday, October 11, 2026

ஐரோப்பிய யூனியன் உடனான ஒப்பந்தத்தால் இந்தியாவின் மதிப்பு உயர்வடைந்துள்ளது: வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல்


ஐரோப்பிய யூனியனுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது என்று வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தை கடந்த 27 ம் தேதி நிறைவடைந்தது. இந்த ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதிக்கும் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் தொடர்பாக தொடர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்த பியூஷ் கோயல், பேச்சுவார்த்தை நிறைவடைந்ததை அடுத்து சர்வதேச செய்தி நிறுவனத்துக்கு அவர் வழங்கிய நேர்காணலில்,

''‘ஐரோப்பிய யூனியனுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், இந்தியாவை புவிசார் அரசியலின் உயர் அடுக்கில் அமர்த்துகிறது. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா, உலகம் முழுவதும் அங்கீகாரத்தையும் முக்கியத்துவத்தையும் பெற்றுள்ளது.

உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரம், வலுவான பொருளாதார அடிப்படைகளைக் கொண்ட நாடு, 140 கோடி மக்களைக் கொண்ட மிகப் பெரிய சந்தை, திறமைகளும், ஆற்றலும் நிறைந்த லட்சியமிக்க இளம் இந்தியா என உலக நாடுகள் இந்தியாவைப் பார்க்கின்றன.

இன்று உலகெங்கிலும் உள்ள வளரும் நாடுகளால், ஒரு வர்த்தக பங்காளியாக; கூட்டாளியாக இந்தியா பார்க்கப்படுகிறது. இதுபோன்ற ஒப்பந்தங்களை மேற்கொள்ள கடந்த காலங்களில் இந்தியா தயக்கம் காட்டியது. தற்காப்பு மனப்பான்மையுடனும், எச்சரிக்கையுடனும் நாம் இருந்தோம். பெரிய சவால்களை எதிர்கொள்ள நாம் தயங்கினோம். பிரதமர் மோடியின் தலைமை காரணமாக, இப்போது 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாற இந்தியா விரும்புகிறது. நமது சர்வதேச இருப்பு, வணிகம், ஈடுபாடுகளை விரிவுபடுத்தாமல் இந்த இலக்கை நாம் அடைய முடியாது.

இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் என்பது 27 வளர்ந்த நாடுகளுடன், பரஸ்பரம் உதவிக்கொள்வதற்கும்; ஒன்றையொன்று பூர்த்தி செய்து கொள்வதற்கும் வழி வகுத்துள்ளது. அவர்களிடம் வெவ்வேறு திறன்களும், தயாரிப்புகளும் உள்ளன.

நம்மிடம் நமக்கானவை உள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மூலம் நாம் ஒரு கூட்டு சக்தியாக மாறுகிறோம். இதுதான் இந்த ஒப்பந்தத்தின் சிறப்பு. இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு பாதுகாப்பை வழங்குகிறது. ’ என தெரிவித்தார்.


you may also like