- by Editor
- 2 years ago
இரகசியம் - பரகசியம் (08.09.2024)
இந்த ஜனாதிபதி தேர்தலையொட்டி இலங்கைத் தமிழரசுக் கட்சி படும்பாடு சந்தி சிரிப்பதாக இருக்கின்றது. அதுவும் கட்சித் தலைவர் மாவையின் திருக்கூத்து சொல்லி மாளாதது. சணம் பித்தம், சணம் வாதம் என்ற நிலைமைதான்.
நடைபெற்று முடிந்த கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க முடிவு கட்டப்பட்டமையை அடுத்து, மாவை சேனாதிராஜா விழுந்தடித்துக் கூறிய கருத்தும், அடுத்த நாள் அவர் அடித்த பல்டியும் சொல்லி மாளாதவை.
இப்போது அடுத்த திருவிழாவை ஆரம்பித்து இருக்கின்றார் மாவையர்.
மத்திய குழுக் கூட்டத் தீர்மானப்படி கட்சி சஜித் பிரேமதாஸவின் வெற்றிக்கு வழி சமைத்து நிற்கின்றது.
ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாவையரை சந்திப்பதற்காக அவர் வீடு தேடி சென்றதும், அடுத்த அந்தர் பல்டி மாவையிடமிருந்து வந்தது.
ரணில் விக்கிரமசிங்கவே இந்த தேர்தலில் வெல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டை அவர் (மாவையர்) அறிவித்திருக்கின்றார்.
ரணிலுடனான அவரின் சந்திப்பை அடுத்து, ரணில் வெல்ல வேண்டும் என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்தைப் பார்த்துவிட்டு கனடாவில் இருந்து ஒரு நண்பர் அழைப்பு எடுத்தார்.
''என்ன, மாவையர் ஒரே குழப்பம் குழப்புகின்றார். என்னவாம் மாவைக்கு?'' என்றார்.
''ஆம். அவர் கருத்துக்கள் குழப்பமாகத்தான் வருகின்றன. அது அவரின் சுபாவம்தானே...?'' - என்றேன் நான்.
''இல்லை..இல்லை. அப்படி அவர் குழம்புவதற்கு காரணங்கள் உண்டு. அது உங்களுக்கு விளங்கவில்லையா?'' - என்று கேட்டார் நண்பர்.
நான் ''உண்மையில் எனக்கு விளங்கவில்லை!'' - என்றேன்.
''என்ன பத்திரிகையாளர் நீர்?'' - என்று சிடு சிடுத்தார் என் நண்பர்.
''தமிழரசு இப்படியான தேர்தல் சமயத்தில் தெற்கின் ஒரு தலைவரை ஆதரிக்க முடிவை எடுத்தால் அது பற்றிய பிரசாரத்தை ஒட்டி பல செலவுகள் இருக்கும். அதற்கான 'டீல்கள்' உண்டு. சரத் பொன்சேகா, மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாஸ என்று 2010, 2015, 2019 இல் ஆதரித்த போது பிரசாரம், கூட்டங்கள் என்று பல செலவுகள் இருந்தன. பல 'C’கள் கைமாறின. இந்தத் தடவை கட்சித் தலைவரான தாம் எம்.பியாக இல்லாதமையால், டீல்களில் தன்னைத் தவிர்த்து, ஓரம் கட்டிவிட்டார்கள் என்று கோபம் மாவைக்கு. ஏற்கனவே எம்.பி. பதவி இழந்தமையால் வறண்டு போய் கிடக்கின்றது அவரது கஜானா. இந்தச் சமயத்தில் டீல்களில் தம்மை ஒதுக்கி விட்டனரோ என்று ஆதங்கம் மாவைக்கு. முன்னராவது சம்பந்தன் இருந்தார். ஒழுங்குகளை ஒழுங்காக - ஓரளவு நீதியாக - வகுத்திருப்பார் என்று மாவை நம்பி வந்தார். இப்போது சம்பந்தனும் இல்லை. தம்மை வெட்டி ஓரங்கட்டி விட்டார்கள் என்று ஆதங்கம் வேறு. அந்தப் பின்னணியில்தான் முதல் நாள் அவர் புலம்ப, அடுத்த நாள் ஏதோ ஒரு மாதிரிக் கவனித்து, சரி செய்து விட்டார்கள் பார்த்தீர்களா?'' என்றார் என் நண்பர்.
எனக்கு புரிந்த மாதிரியும் இருந்தது. புரியாத மாதிரியும் இருந்தது. இந்த சமயத்தில் என் நண்பர் தொடர்ந்தார்.
''இந்தக் குழப்ப விடயத்தைத் தமது புலனாய்வு வட்டாரங்கள் மூலம் அறிந்ததும் ரணில் - நரித் தந்திர சாலி - தாமே மாவையரைத் தேடிச் சென்று டீல் முடித்துவிட்டு புறப்பட்டு விட்டார். அவர் போனதும் அவர் வெல்ல வேண்டும் என்று மாவையர் அதிரடி அறிவிப்பு விட்டதன் பின்னணியில் ஜனாதிபதி ரணில் கொடுத்த ஊக்கம் காரணமாக இருக்கும் என்றார் என் நண்பர்.
அவர் கூறியவை உண்மையாகவும் இருக்கலாம். பொய்யாகவும் இருக்கலாம். ஆனால் சூழ்நிலை, சந்தர்ப்பங்களை வைத்துப் பார்க்கும்போது மறுக்க முடியாததாகவும் அது உள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமை 14ஆம் திகதி தமிழரசின் மத்திய குழு மீண்டும் கூடுகிறது. சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பது எனக் கடந்த முதலாம் திகதிய மத்திய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை எப்படி நடைமுறைப்படுத்துவது என்று ஆராய்வது 14ஆம் திகதிய கூட்ட நிகழ்ச்சி நிரலின் முக்கிய அம்சம்.
ஆனால் வெளிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் மாவையின் நேற்றைய சந்திப்பின்போது திருப்திகரமான டீல் எட்டப்பட்டு இருக்குமானால், 14ஆம் திகதிய மத்திய குழுக் கூட்டம் மேலும் களேபரப்படும் என்பது மட்டும் நிச்சயம்.