Thursday, October 8, 2026

உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்த முடியாது -  நளிந்த ஜயதிஸ்ஸ


22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களையும் பரிசீலித்த பின்னர், அது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (01) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையிலேயே குறித்த அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமா என்பது தீர்மானிக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.

உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு அப்பாற்பட்டு எந்த வகையிலும் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த முடியாது எனத் தெரிவித்த அமைச்சர், இது தொடர்பில் மனுக்களைத் தாக்கல் செய்த அனைத்து தரப்பினரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அதன்படி, இன்றிலிருந்து மூன்று வாரங்களுக்குள் உயர் நீதிமன்றம் குறித்த மனுக்கள் தொடர்பான தனது தீர்ப்பை பாராளுமன்றத்திற்கு அறிவிக்க முடியும் எனவும், அதன் பின்னர் நீதிமன்றத் தீர்ப்பு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மாத்திரம் போதுமானதா அல்லது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டுமா என்பதை உயர் நீதிமன்றமே தீர்மானிக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சியோ அல்லது ஆளும் தரப்போ கோரிக்கை விடுப்பதன் அடிப்படையில், உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக சர்வஜன வாக்கெடுப்பை நடத்த முடியாது எனவும் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

மேலும், உயர் நீதிமன்றத்தில் சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பான மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதற்கும், தேசிய மக்கள் சக்தியினால் ஜனாதிபதியின் தலைமையில் கூட்டங்கள் நடத்தப்படுவதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

you may also like