Friday, October 9, 2026

ஈரான் பேச்சுவார்த்தைகளைத் தடுக்க இஸ்ரேலுக்குள் சில சக்திகள் முயற்சி


ஈரானுடன் அமெரிக்கா முன்னெடுத்து வரும் தூதரக பேச்சுவார்த்தைகள் மற்றும் அமைதி முயற்சிகளைத் தடுக்க இஸ்ரேல் அரசாங்கத்துக்குள் உள்ள சில சக்திகள் முயற்சி செய்து வருவதாக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மத்திய கிழக்கில் போர் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்ற நோக்கில் சில இஸ்ரேலிய தரப்பினர் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாட்காஸ்ட் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட ஜே.டி. வேன்ஸ், ஈரானுடனான சமாதான பேச்சுவார்த்தைகளில் இருந்து அமெரிக்காவை விலக்கி வைப்பதற்காக இஸ்ரேல் அரசாங்கத்துக்குள் உள்ள சிலர் பின்னணியில் செயற்பட்டு வருவதாக தனக்கு உறுதியான தகவல்கள் இருப்பதாக குறிப்பிட்டார்.

வெளிநாட்டு அரசாங்கங்கள் தமது சொந்த நலன்களுக்காக அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளைத் தங்களுக்கு சாதகமாக மாற்ற முயற்சிப்பது சர்வதேச அரசியலில் வழக்கமான விடயம் எனவும், ஆனால் அமெரிக்க தலைவர்கள் இவ்வாறான அழுத்தங்களுக்கு அடிபணிந்து நாட்டின் சுயாதீன முடிவெடுக்கும் உரிமையை இழக்கும்போது பிரச்சினைகள் உருவாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா எப்போதும் தனது தேசிய நலன்களை அடிப்படையாகக் கொண்டு தனித்துவமான முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் வேன்ஸ் வலியுறுத்தினார்.

எனினும், முழுமையான இஸ்ரேல் அரசாங்கமும் பேச்சுவார்த்தைகளையும் அமைதியையும் எதிர்க்கிறது என தாம் கூறவில்லை என்றும், அந்த அரசுக்குள் உள்ள சில குறிப்பிட்ட தரப்பினரே இத்தகைய தடைகளை ஏற்படுத்துவதாகவும் அவர் விளக்கமளித்தார்.

மேலும், கடந்த காலங்களில் ஈரானுக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட கடுமையான இராணுவ மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் இஸ்ரேலின் அழுத்தத்தால் அல்ல என்றும், அவை அமெரிக்காவின் சொந்த தீர்மானங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டவை என்றும் வேன்ஸ் குறிப்பிட்டார்.

இந்நிலையில், ஜே.டி. வேன்ஸின் கருத்துக்கள் வெளியாகியுள்ள நிலையில், ஈரான் மீதான அமெரிக்காவின் நடவடிக்கைகள் தொடர்ந்தும் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு அருகாமையில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகவும், அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்த நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஈரான் நோக்கிச் சென்ற கப்பல் ஒன்றின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகவும், ஹார்முஸ் ஜலசந்தியை சிவப்பு கோடாக ஈரான் அறிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

you may also like