Thursday, October 8, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பணிகளை மீண்டும் பொறுப்பேற்றார் ஷம்மி சில்வா


மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவு காரணமாக அர்ஜூன ரணதுங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை விட்டுச்செல்ல நேரிட்டுள்ளது.

இந்த நிலையில், தலைவர் ஷம்மி சில்வா மீண்டும் அதன் பணிகளை பொறுப்பேற்றார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த எழுத்தாணை மனுவொன்று நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்து, இடைக்கால நிர்வாக சபையின் நடவடிக்கைகளை 14 நாட்களுக்கு இடைநிறுத்தி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

விளையாட்டுத்துறை சட்டத்தின் 32 ஆவது மற்றும் 33 ஆவது சரத்துக்களின் பிரகாரம், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவை இடைநிறுத்தி கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு அதிவிசேட வர்த்தமானியொன்றை வெளியிட்ட விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகத்தை இடைக்கால நிர்வாக சபையின் கீழ் கொண்டு வந்தார்.

மறு அறிவித்தல் வரை அல்லது தேர்தல் நடத்தப்படும் வரை அர்ஜூன ரணதுங்கவின் தலைமையில் நியமிக்கப்பட்ட இந்த இடைக்கால நிர்வாக சபைக்கு மேலும் ஆறு உறுப்பினர்கள் பெயரிடப்பட்டனர்.

நேற்று காலை விளையாட்டுத்துறை அமைச்சரை சந்தித்த அர்ஜூன ரணதுங்க, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு சென்று பணிகளை ஆரம்பித்தார்.

இதேவேளை, கிரிக்கெட் இடைக்கால நிர்வாக சபை நியமிக்கப்பட்டமை தொடர்பாக ஜனாதிபதி அறிந்திருக்கவில்லை என ஜனாதிபதியின் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரை அழைத்து ஜனாதிபதி இது தொடர்பான விபரங்களை கேட்டறிந்தார்.

இடைக்கால நிர்வாக சபையை அமைக்கும் தீர்மானத்தை மீளப்பெறத் தவறினால் விளையாட்டுத்துறை சட்டத்தை தமது பொறுப்பின் கீழ் கொண்டுவருவேன் என்று ஜனாதிபதி கூறினார் என்று அமைச்சர் ரொஷான் ரணசிங்க நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். 

you may also like