- by Editor
- 1 month ago
இலங்கை, இந்திய அரசுகளே சாந்தனின் சாவுக்குப் பொறுப்பு: சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவிப்பு
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
"இலங்கை மற்றும் இந்திய அரசுகளின் அக்கறையின்மை காரணமாக சுதேந்திரராஜா எனப்படும் சாந்தன் என்ற நல்ல மனிதரின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது. எனவே, இலங்கை, இந்தியா ஆகிய இரண்டு நாடுகளும் சாந்தனின் இறப்புக்குப் பொறுப்புக் கூற வேண்டும்."
- இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றத்தில் நேற்று குற்றம்சாட்டினார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, சிறையிலிருந்து விடுதலையான சாந்தன் கடந்த 28ஆம் திகதி சென்னை ராஜீவ் காந்தி அரச வைத்தியசாலையில் மாரடைப்பால் காலமானார். அவரது புகழுடல் நேற்றுமுன்தினம் யாழ். வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்ல வளாக மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சாந்தனுக்கு நேற்று நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தி உரையாற்றும்போதே தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சந்தேகநபகராகக் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சாந்தன் பின்னர் 2022ஆம் ஆண்டு திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார்.
விடுதலை செய்யப்பட்ட ஏழு பேரில் 3 பேர் இந்தியக் குடியுரிமை கொண்டவர்கள். இந்தியக் குடியுரிமை கொண்டவர்களாக இருந்தமையால் அவர்கள் இயல்பு வாழக்கையை வாழத் தொடங்கினர்.
ஆனால், இலங்கைக் குடியுரிமையை கொண்ட சாந்தன் உட்பட 4 பேர் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் இலங்கைப் பிரஜைகள் என்பதை வெளிப்படுத்த வேண்டுமென இவர்களது குடும்பத்தினர் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அத்துடன், வெளியுறவு அமைச்சருக்கு மூன்றுமுறை கடிதங்களையும் எழுதியிருந்தனர்.
ஆனால், இலங்கை அரசின் அசமந்தப் போக்கு காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக இவர்களை இலங்கைக்கு அழைத்துவரும் இராஜதந்திர நகர்வுகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. இதனால் சாந்தன் உயிருடன் தாயகம் திரும்ப முடியாது போனது.
தமிழ் மக்கள் சார்பாகச் சாந்தனுக்கு அஞ்சலி செலுத்துகின்றோம். இலங்கை, இந்திய அரசுகள் நினைத்திருந்தால் சாந்தன் இலங்கை திரும்பி தமது குடும்பத்தினருடன் வாழ்ந்திருக்க முடியும்.
இந்திய வெளிவிவகார அமைச்சும் தமிழர்கள் தொடர்பான பிரச்சினைகளில் எவ்வித தீர்மானங்களையும் எடுப்பதில்லை. இலங்கை, இந்தியா ஆகிய இரண்டு நாடுகளும் சாந்தனின் இறப்புக்குப் பொறுப்புக்கூற வேண்டும்.
ஏனைய மூவரையும் விரைவாக இலங்கை அழைத்துவர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்." - என்றார்.