- by Editor
- 4 months ago
இரகசியம் - பரகசியம் (29.11.2024)
-
- by Editor,
- 1 year ago
- in இரகசியம் பரகசியம்
பேய் மழை. பெருவெள்ளம். மக்கள் பாதிப்பு உச்சம். இந்தச் சமயத்தில் அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும் நேரம் பார்க்காமல், முழுமூச்சாக மக்கள் தொண்டாற்ற வேண்டும்.
ஆனால், அதற்காக படம் காட்டக் கூடாது. ஆயினும் அப்படித்தான் விடயங்கள் நடக்கின்றன போல தெரிகிறது.
மழை வெள்ளம் என்றதும் வடக்கில் விடயங்களை கையாள்வதற்காக அதிகாரிகளைக் கூட்டி, கூட்டங்களை நடத்தி, விடயங்களை விவாதித்து, வழிகாட்டல்களை வழங்குகிறார் ஆளுநர். அது அவரின் பணி. தொடர்ந்து இத்தகைய வழிபடுத்தல்களை வழங்குவதற்காக அவர் அதிகாரிகளை சந்தித்த வண்ணம் இருக்க வேண்டும்.
ஆனால் அரசியல்வாதிகளோ ஒருபுறம் மழை வெள்ளம் என்றால், மறுபுறம் அவர்களின் அரசியல் சித்து விளையாட்டு என்று இருக்கின்றார்கள்.
யாழ் மாவட்டத்தில் மட்டும் நேற்று முன்தினம் அரசு தரப்பில் மூன்று அரசியல்வாதிகள் மூன்று வெவ்வேறு கூட்டங்களை வெள்ள விடயங்களை கையாள்வதற்காக தனித்தனியாக நடத்தி இருக்கிறார்கள். இவை மூன்றும் ஆளுநரின் வழமையான கூட்டத்துக்கு மேலதிகமானவை.
நேற்று முன்தினம் 27ஆம் தேதி வெள்ள அனர்த்த விடயம் குறித்து ஒரு விரிவான ஆய்வுக்கும் கலந்துரையாடலுக்குமாக பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அன்று பிற்பகல் 3 மணிக்கு வருகின்றார் என்று கூறப்பட்டது. இரு தினங்களுக்கு முன்பே இக்கூட்டம் பற்றி சம்பந்தப்பட்டவருக்கு தெரியும்.
அப்படி இருக்க அன்று காலையில் யாழ் மாவட்ட செயலகத்தில் அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டல்களை வழங்க என்ற பெயரில் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் ஒரு கலந்துரையாடலை நடத்துகிறார்.
அதன் பின்னர் ஆளும் தரப்பின் எம்.பியான இளங்குமரன் தனியாக ஒரு கலந்துரையாடலை முன்னெடுக்கிறார்.
இவர்கள் இருவரும் தனித்தனியாக வெள்ள அனர்த்த முகாமைத்துவத்துக்கான கூட்டங்களை நடத்தி முடித்துவிட்டு போக, பாதுகாப்புப் பிரதி அமைச்சர், ஆளுநர், அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர் என முக்கியமான அனைவரும் பங்கு பற்றிய கலந்துரையாடல் பின்னர் நடைபெறுகின்றது.
ஒரே விடயத்துக்காக, ஆளும் தரப்பின் மூன்று அரசியல்வாதிகள் ஒரே நாளில், யாழ் மாவட்டச் செயலக அதிகாரிகளுக்கு தனித்தனியாக மூன்று கூட்டங்களை - கலந்துரையாடல்களை - ஏன் நடத்த வேண்டும்? புரியவில்லை.
நிவாரண வேலைகளிலும் பார்க்க, கூட்டம் போட்டுத் தத்தமது செல்வாக்கை அதிகாரிகளுக்கு காட்டுவது தான் அரசியல் தலைவர்களின் எண்ணமோ என்னவோ...?
***
நேற்று முன்தினம் கொழும்பில் வர்த்தக அமைச்சில் பணிபுரியும் நண்பர் ஒருவர் திடீரென தொலைபேசி அழைப்பு எடுத்தார்.
தங்கள் அமைச்சுக்கு இந்திய தூதரகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் வந்திருக்கின்றார்கள் என அவர் சொன்னார். அத்தகவலில் அதிசயமோ செய்தியோ இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
அதற்கு என்ன இப்போது என்று கேட்டேன்.
''சோழியன் குடுமி சும்மா ஆடவில்லை'' -என்றார் என் நண்பர். எனக்கு விளங்கவில்லை. என்ன, ஏது என்று கேட்டேன்.
''நாட்டில் அரிசி பற்றாக்குறை. வெள்ளம் வேறு. இதனால் விளைந்த புதிய அரிசி சந்தைக்கு வருவதிலும் பாதிப்பு ஏற்படலாம். அதற்கிடையில் 70 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. வெள்ளத்தால் வடகிழக்கில் அரிசி உற்பத்தி பெரும் பிரச்சினையைச் சந்திக்கும் ஆபத்து உண்டு. இந்த சமயத்தில் அரிசி இறக்குமதி இன்னும் அதிகரிக்கச் சாத்தியங்கள் உள்ளன. அரிசியை இறக்குமதி செய்யும் அரசின் முடிவையும், வர்த்தக அமைச்சுக்கு இந்திய உயர் மட்டம் வருகை தந்தமையையும் சேர்த்து பார்த்து கூட்டி கழித்து தீர்மானியுங்கள்!'' - என்றார் என் நண்பர்.
சோழியன் குடுமி சும்மா ஆடவில்லைதான்...!