Saturday, October 10, 2026

ஜல்லிக்கட்டு குறித்து சர்ச்சைக் கருத்து: த.வெ.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்!


சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டை இழிவாகப் பேசிய சோழவந்தான் தொகுதி த.வெ.கவின் எம்.எல்.ஏயான எம்.வி.கருப்பையாவை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் அலங்காநல்லூரில் எதிர்வரும் 3 ஆம் திகதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சட்டப்பேரவையில் சோழவந்தான் தொகுதி த.வெ.கவின் எம்.எல்.ஏயான எம்.வி.கருப்பையா, தமிழர்களின் பாரம்பரியத்தின், கலாச்சாரத்தின், நாகரீகத்தின், வீரத்தின் அடையாளமான ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுப் போட்டி இளைஞர்களை சீரழிக்கிறது என்று அநாகரீகமாகக் கொச்சைப்படுத்திப் பேசியிருப்பது இளைஞர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் மிகுந்த கொந்தளிப்பையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

த.வெ.கவினர் இதுபோன்று தான்தோன்றித்தனமாகப் பேசிவருவது கடும் கண்டனத்துக்கு உரியது. தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கும், அ.தி.மு.கவுக்கும் இடையிலான அரசியல் மற்றும் சட்டப் போராட்ட வரலாறு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

  விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், உச்ச நீதிமன்றம் 2014 ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முற்றிலுமாகத் தடை விதித்தது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தோடு கலந்தது என்பதால் இந்தத் தடையை நீக்க வேண்டும் என மத்திய அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததோடு, உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தார்.

தொடர்ந்து, 2017 ஆம் ஆண்டு ஜனவரியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்களும், மாணவர்களும் வரலாற்றுச் சிறப்புமிக்க அறப் போராட்டத்தை நடத்தினர். அப்போதைய அ.தி.மு.க. அரசு போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசின் ஒப்புதலுடன் 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இதனை அடுத்து ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மீண்டும் நடத்தப்பட்டு வருகின்றன.

அவசரச் சட்டத்தைத் தொடர்ந்து, எனது தலைமையிலான அரசு, சட்டப் பேரவையில் விலங்கு வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு நிரந்தரச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் ஜல்லிக்கட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல, அது தமிழர்களின் கலாச்சார பாரம்பரியம் என சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், `தமிழர்களின் வீர விளையாட்டான பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டி, இளைஞர்களை சீரழிக்கிறது என்று பேசிய த.வெ.கவின் எம்.எல்.ஏ. கருப்பையாவையும், த.வெ.க. அரசையும் கண்டித்து ஒரங்கிணைந்த மதுரை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.- என்று தெரிவிக்கப்படவுள்ளது.


you may also like