- by Editor
- 2 years ago
இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை கடுமையாகச் சாடியுள்ளது சர்வதேச மன்னிப்புச் சபை
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
சர்வதேச மன்னிப்புச் சபை, தமது உலகளாவிய வருடாந்த அறிக்கையில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைக் கடுமையாகச் சாடியுள்ளது.
அதன்படி, நீதி மற்றும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான விடயத்தில் இலங்கை அரசு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதனையும் காணாத நிலையில், தண்டனையின்மை தொடர்ந்தும் நிலைபெற்றுள்ளது என்று சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார நெருக்கடி வறுமைக்கோட்டுக்குக் கீழேயுள்ள மக்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியுள்ளது.
உள்நாட்டு விசாரணை ஆணையங்கள் பொறுப்புக்கூறலை உறுதி செய்யத் தவறியதால், பாதிக்கப்பட்ட சில சமூகங்கள் இந்தத் திட்டங்களை முற்றிலுமாக நிராகரித்தன.
இந்தநிலையில், நட்டஈடுகளுக்கான அலுவலகம் மற்றும் காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம், என்பனவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை இலங்கை அரசு எட்டவில்லை
அத்துடன் மனித உரிமை மீறல்களில் தண்டனையின்மைக்கான எடுத்துக்காட்டுகளாக உள்நாட்டு நீதிமன்ற அமைப்பில் மீண்டும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லாமல் இழுத்தடிக்கப்பட்டுள்ளது என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த இலங்கை அரசு மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளையும் சர்வதேச மன்னிப்புச் சபை கடுமையாகச் சாடியுள்ளது,
கடந்த நவம்பரில் மட்டக்களப்பில் நினைவேந்தல் ஊர்வலத்துக்காக 9 தமிழர்கள் கொடூரமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவத்தை சர்வதேச மன்னிப்புச் சபை மேற்கோள்காட்டியுள்ளது.
இந்தச் சட்டத்தை இரத்துச் செய்வதாக உறுதியளித்த போதிலும், இலங்கை அரசு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வருகின்றது.
இலங்கையின் இணையப் பாதுகாப்பு யோசனையையும், பௌத்தத்தை விமர்சித்ததற்காக சமூக விமர்சகர்கள் கைது செய்யப்பட்டதையும் சர்வதேச மன்னிப்புச் சபை விமர்சித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் போராட்டங்கள் இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரால் கடுமையாக ஒடுக்கப்படுவதால், சர்வதேச சமூகம் அதன் பாதுகாப்புப் படைகளின் பயிற்சி மற்றும் ஏற்பாடுகள் உட்பட இலங்கை அரசுடனான ஒத்துழைப்பை அவசரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.