Saturday, October 10, 2026

இலங்கைக்கு IMF மீண்டும் பச்சைக்கொடி


இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு தொடர்ந்தும் முழுமையான ஆதரவை வழங்குவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் Julie Kozack, அண்மைக்காலங்களில் இலங்கை இரண்டு பெரிய பொருளாதார அதிர்ச்சிகளை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

அதில் முதன்மையானதாக “டித்வா” புயலை அவர் குறிப்பிட்டார். இந்த இயற்கை அனர்த்தம் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர்நிலை மற்றும் அதன் உலகளாவிய தாக்கங்களும் இலங்கையின் பொருளாதாரத்திற்கு இரண்டாவது முக்கிய சவாலாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இத்தகைய கடினமான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், இலங்கையின் மக்களும் பொருளாதாரமும் வலுவான மீளெழும் திறனை வெளிப்படுத்தியுள்ளதாக ஜூலி கோசாக் பாராட்டினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டங்கள் தற்போது பலனளிக்கத் தொடங்கியுள்ளதாகவும், அதிகாரிகளின் உறுதியான அர்ப்பணிப்பு காரணமாக நாட்டின் பொருளாதார செயற்பாடுகள் படிப்படியாக முன்னேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை அதிகாரிகளுடன் தொடர்ந்து நெருக்கமாக இணைந்து பணியாற்றி வருவதாகவும், எதிர்கால ஆதரவு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து ஆலோசிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கைக்கு ஆதரவளிப்பதில் சர்வதேச நாணய நிதியம் தொடர்ந்தும் உறுதியாக இருப்பதாகவும் ஜூலி கோசாக் வலியுறுத்தினார்.

you may also like