- by Editor
- 1 year ago
இரகசியம் - பரகசியம் (29.5.2025)
-
- by Editor,
- 1 year ago
- in இரகசியம் பரகசியம்
திருகோணமலை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், தமிழரசுக் கட்சியின் மாவட்டக் கிளைத் தலைவராகவும் இருக்கின்ற குகதாசன், சத்தம் சந்தடியின்றிப் பண்ணுகின்ற குசும்புத்தனம் தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு - நிர்வாகத்துக்கு - பெரும் தலைவலியாக மாறியிருப்பதாகத் தெரிகின்றது.
சம்பந்தனால் திருகோணமலைக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்ட குகதாசன் இப்படித்தான் சம்பந்தனுக்கும் 'மூட்டைப்பூச்சி' மாதிரி நசுக்கிடாமகல் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார். அதே வேலையை இப்போது தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு அவர் கொடுத்துக் கொண்டிருக்கின்றார் எனக் கட்சித் தலைமை சீறுகின்றது.
உள்ளூராட்சித் தேர்தல் முடிவுற்ற பின்னர், கட்சியின் தலைமை திருகோணமலை மாவட்டப் பிரதிநிதிகள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுடன் பேசி, தெரிவு செய்யப்பட்ட சபைகளுக்கான தவிசாளர், உதவித் தவிசாளர் வேட்பாளர்களைத் தேர்வு செய்து தீர்மானிக்கும் என்று அவருக்கு (குகதாசனுக்கு) கட்சித் தலைவரும் செயலாளரும் ஏற்கனவே தெளிவாக எடுத்துக் கூறியிருக்கின்றனர்.
கட்சியின் பொதுச் செயலாளர் ஏற்கனவே திருகோணமலைக்குச் சென்று குகதாசன் உட்பட மாவட்ட பிரதிநிதிகளையும், உள்ளூராட்சி சபைகளில் தமிழரசுக்கு ஆதரவு தரக்கூடிய பிற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளோடும் பேச்சு நடத்தி விட்டு வந்திருந்தார். அச்சமயம் கட்சியின் பிரதிநிதிகள், ஆதரவாளர்கள் மத்தியில் உரையாடிய செயலாளர் சுமந்திரன், திருகோணமலை மாநகர சபை மேயர், உதவி மேயர், மாவட்டத்தின் பிற உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், பிரதித் தவிசாளர்கள் போன்றோர் தெரிவுக்காக கட்சித் தலைமை மீண்டும் திருகோணமலைக்கு வரும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி வரும் சனிக்கிழமை அங்கு செல்ல கட்சித் தலைமை தீர்மானித்து இருந்தது.
ஆனால் அதற்கு இடையில் தமது மூட்டைப் பூச்சித்தனமான கடி வேலையை குகதாசன் ஆரம்பித்து விட்டார். தமக்குத் தேவையானவரை மாநகர மேயராக அறிவிப்பதற்காக, கட்சியில் தெரிவு செய்யப்பட்ட ஒன்பது மாநகர சபை உறுப்பினர்களையும் கூட்டி, தேர்வு நடத்தி ஒருவரை மேயர் பதவிக்கு போட்டியிடுபவர் என்று தம்பாட்டில் அறிவித்திருக்கிறார் குகதாசன்.
இது தவறான நடவடிக்கை, கட்சி ஏற்கனவே வழங்கிய அறிவுறுத்தலுக்கு - முடிவுக்கு - மாறான ஒற்றைப் போக்கு ஏற்பாடு என்பதை கட்சியின் தலைவர் குக்தாசனுக்கு நேற்று தொலைபேசியில் அறிவுறுத்தல் விடுக்க ஏற்பாடாகி இருந்ததாகத் தெரிய வந்தது.
25 உறுப்பினர்களைக் கொண்ட திருகோணமலை நகர சபையில் தமிழரசு கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கான பேச்சுக்களை மற்றைய கட்சிகளோடு இனமும் தமிழரசு கட்சி தீர்மானித்து முடிவெடுக்க முன்னர், குகதாசன் வேண்டும் என்றே திட்டமிட்டு அவசர அவசரமாக, காதோடு காது வைத்த மாதிரி, இந்த காய் நகர்த்தலை செய்து, திடீர் அறிவிப்பை விடுத்திருக்கிறார் என்று கூறப்படுகின்றது.
அவர் கட்சியின் மாவட்ட தலைவர். தம்மோடு சேர்ந்து இயங்கும் தமது மாவட்டச் செயலாளரை மேயராக்கும் திட்டத்தில் இந்த சதி நகர்வை அவர் முன்னெடுத்து இருக்கிறார் எனக் கூறப்படுகிறது.
திருகோணமலை மாநகர சபையின் 25 உறுப்பினர்களில் ஆக ஒன்பது பேர்தான் தமிழரசுக் கட்சியை சேர்ந்தவர்கள். சங்கு கட்சியின் நான்கு உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூன்று உறுப்பினர்களும் என மேலும் ஏழு பேர் தமிழரசு கட்சி முன்னிலைப்படுத்தும் மேயர் வேட்பாளரை ஆதரிக்கக் கூடும் என கருதப்படுகின்றது. ஆகவே அந்த இரு கட்சிகளையும் சேர்ந்த ஏழு உறுப்பினர்களின் கருத்தும் மேயர் தெரிவில் உள்வாங்கப்படுவதுதான் சுமுகமான பெயர் தெரிவுக்கு வழிவகுக்கும் என சுட்டிக்காட்டப்படுகின்றது. அந்தக் கட்சியின் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுடன் நேரடியாக இல்லாவிட்டாலும், அந்த இரண்டு கட்சிகளின் மாவட்டத் தலைவர்களோடேனும் கலந்தாலோசித்து, அவர்களின் கருத்துகளையும் உள்வாங்கித்தான் மேயர் வேட்பாளரைக் கட்சித் தலைமை தீர்மானிக்கும் என்று கூறப்படுகின்றது.
இந்தப் பின்புலத்தில் கட்சியின் தலைமைதான் சாதக, பாதகங்களை ஆராய்ந்து வேட்பாளர் யார் என்பதை தீர்மானிக்கும் என கட்சி தலைமை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது
எது, எப்படி ஆயினும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் விடயத்தில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நடக்கும் உறுப்பினர்கள் இலகுவாக பதவி விலக்கப்பட சட்ட ஏற்பாடுகள் வசதியாக உண்டு. இந்த விடயத்தில் - நியமனங்கள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்பான விடயத்தில் - கையெழுத்திடும் அதிகாரம் கட்சியின் செயலாளர் என்ற முறையில் சுமந்திரனிடமே உண்டு, குகதாசனிடம் அல்ல என்பதை திருகோணமலை மாவட்ட கிளை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் கவனத்தில் கொண்டிருக்கின்றார்கள் எனத் தெரிகிறது.
கட்சியின் ஒழுங்கு முறைக்கு மாறாக குகதாசன் முன்னெடுக்கும் நகர்வுகளுக்கு கட்சியின் அரசியல் குழுவிலும், மத்திய குழுவிலும் கடும் அதிருப்தியும் காய்ச்சலும் உள்ளது என்றும் தெரிகின்றது.
+++++++++++++++++++++
நேற்று முன்னிரவில் கனடாவில் இருந்து வாட்ஸ் அப்பில் ஓர் அழைப்பு வந்தது. எடுத்தவர் தமிழரசுக் கட்சியின் தீவிர ஆதரவாளர். எடுத்த எடுப்பில் ஒரு கேள்வி கேட்டார்.
''சைக்கிள் தம்பி கஜேந்திரகுமார் வெள்ளிக்கிழமையன்று சுமந்திரனைச் சந்தித்துப் பேசுகிறார் என சிவாஜிலிங்கதார் கூறுகிறார். அப்படிச் சந்திப்பு நடக்குமா?'' - என்று கேட்டார் அந்த நண்பர்.
''நடக்கலாம். அப்படித்தான் கூறுகிறார்கள்'' - என்றே நான்.
என் பதில் வர முன்னரே அவர் சீறி விழுந்தார்.
''ஏன் சுமந்திரனுக்கு வெட்கம், ரோஷம், மானம், சூடு, சுரணை ஏதும் கிடையாதா? தும்புக்கட்டை, விளக்குமாறு போன்றவற்றுக்கு கூட சமனானவர் அல்லர் சுமந்திரன் என்று பகிரங்கமாகக் கூறியவர் கஜேந்திரகுமார். அவரை சுமந்திரன் சந்திப்பது தமிழரசு கட்சிக்கு இழுக்கு இல்லையா?'' - என்று பாய்ந்தார் அந்த நண்பர்.
''அரசியல் என்றால் சூடு, சுரணை எல்லாவற்றையும் தள்ளி வைத்துவிட்டுத் தானே வரவேண்டும்?'' என்று நியாயம் பிளந்தேன் நான். ஆனால் அது அவருக்கு பிடிக்கவில்லை.
''ஏன், 'சுமந்திரனை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளராக நான் ஏற்கவில்லை' என்று சிறிதரன் எம்.பி. கூறியதும் சுமந்திரனுக்கு சீற்றம் பொத்துக் கொண்டு வருகிறது. கிளிநொச்சி நியமனங்களைச் செய்ய மாட்டேன் என்று பகிரங்கமாக அறிவிக்கிறார். கஜேந்திரகுமார் விடயத்தில் மாத்திரம் ஏன் இந்த நழுவல், வழுவல்?'' என்று அவர் கேட்ட கேள்விக்கு என்னிடம் பதில் இருக்கவில்லை. ஆயினும் சமாளிப்புக்கு ஏதாவது கூறியாக வேண்டும் என்று கட்டாயத்தில் நான் விளக்கம் ஒன்று கொடுத்தேன்.
''தாங்கள் 24 கரட் தங்கம். மற்றவர்கள் எல்லாம் ஒன்றுக்கும் உதவாத பித்தளைகள், தகரங்கள் என்று ஒதுக்கியவர்களை - துரோகிகள், ஊழல்வாதிகள், ஒட்டுக் குழுக்கள், இந்திய அடிமைகள் என்று தாங்கள் மோசமாக விமர்சித்தவர்களை - எல்லாம் தம்பி கஜேந்திரகுமார் மிக நெருக்கமாக அரவணைக்கும் போது, இன்னொரு கட்சியின் தலைவராக கஜேந்திரகுமாரை சுமந்திரன் சந்திப்பது தவறில்லைத்தானே..!'' - என்று நான் சுமந்திரனின் சட்டத்தரணியாக அவருக்கு விளக்கம், வியாக்கியானம் கொடுத்தேன். ஆனால் அது அவருக்குத் திருப்தி தரவில்லை என்றே தோன்றியது.
''அப்படி என்றால் வெள்ளிக்கிழமை அந்தச் சந்திப்பு நடந்தால் - சந்திப்புக்கு சுமந்திரன் வெட்கம், ரோஷம் பார்க்காமல் போனால் - அது பற்றிய செய்திக்கு நல்ல ஒரு தலைப்பிடுங்கள்'' - என்றார் அவர்.
நான விடயம் தெரியாமல், 'என்ன தலைப்புப் போடுவது?' என்று நான் அவரைச் சீண்டும் விதத்தில் கேட்டேன். அவரது பதில் சடார் என்று வந்தது.
''கஜேந்திரகுமாரைச் சந்தித்த தும்புத்தடி!' என்று தலைப்பிடுங்கள்'' என்று கூறியபடி, தொலைபேசியைத் துண்டித்தார் அந்த தமிழரசுக் கடும் போக்காளர்.