- by Editor
- 1 month ago
நேபாளத்தில் கோர வெள்ளம், நிலச்சரிவு - உயிரிழப்பு 469 ஆக அதிகரிப்பு
-
- by Editor,
- 1 month ago
- in இலங்கை செய்திகள்
நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 469 ஆக அதிகரித்துள்ளது.
இந்த இயற்கைப் பேரிடரில் 1,400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக நேபாள பொலிஸார் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளைத் துரிதப்படுத்தும் வகையில் நேபாள இராணுவத்தினரும் மீட்புக் குழுவினரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இமயமலைப் பகுதியில் பனிப்பாறை திடீரென உடைந்து விழுந்ததன் காரணமாகவே இந்த அதிதீவிர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் சேற்றுப் பெருக்கு காரணமாக எல்லைப் பகுதிகளில் உள்ள பல கிராமங்களும் பாலங்களும் முற்றாக அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
இதேவேளை, திபெத் எல்லைப் பகுதியிலும் வெள்ளப்பெருக்கின் தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், சீனாவில் மூவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, நேபாளம் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளிலும் பதிவான மொத்த உயிரிழப்பு 472 ஆக அதிகரித்துள்ளது.
திபெத்தின் சோசென் கோலா மற்றும் புரேபு சாங்போ ஆறுகள் சங்கமிக்கும் பகுதியில் புதிதாக தற்காலிகத் தடுப்பு ஏரியொன்று உருவாகியுள்ளது. இதில் சுமார் 30 இலட்சம் கனமீற்றர் நீர் தேங்கக்கூடிய அபாயம் காணப்படுவதால், சீனா கீழ்நிலைப் பகுதிகளுக்கு ‘Level-IV’ எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் காணாமல் போன நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் மற்றும் யாத்ரீகர்களைத் தேடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக நேபாள இராணுவத்தின் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருவதுடன், பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.