- by Editor
- 7 months ago
இரகசியம் - பரகசியம் (27.06.2024)
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று இரவு ஆற்றறிய உரையை அவதானித்த போது எனக்கு மனதுக்குள் சிரிப்புதான் வந்தது.
''சிலர் பதவிக்காக பாடுபடும் போதும், நான் நாட்டுக்காகப் பாடுபடுகிறேன்!'' - என்ற சாரப் பட ஜனாதிபதியின் உரை அமைந்தது.
ரணில் நேரடி அரசியலுக்கு வந்து ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாகின்றன. இந்த ஐம்பது ஆண்டுகளில் 48 ஆண்டுகள் அவரும் இந்த பதவிக்கு வரத்தான் பாடுபட்டார். நாளை அவரது இடத்துக்கு வரப் போகின்றவர்கள் இன்று அதற்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதில் குறை கூற ஒன்றுமே இல்லை.
அவர்கள், ரணில் இப்போது வகிக்கும் பதவிக்குத் தாங்கள் வரப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ரணிலோ கிடைத்த பதவியில் இறுதிக்காலம் வரை நீடிக்கப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். அவ்வளவு மட்டும்தான் வித்தியாசம். இதில் ரணில் மற்றவர்களைப் பார்த்துக் குறை கூற ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.
***
ஜனாதிபதியின் பதவி காலத்தை நீடிக்கும் முயற்சிக்கு இனிப் போதுமான கால அவகாசம் இல்லை என்று விடயம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. அதனால் இன்னும் நூறு நாள்களில் ஜனாதிபதித் தேர்தல் நடப்பது உறுதியாகி வருகின்றது.
தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் மூவருமே தாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றதும் அடுத்த 24 மணி நேரத்தில் நாடாளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத் தேர்தலுக்கு உத்தரவிடுவோம் என்று கூறி வருகின்றனர். அதனால் இன்னும் 100 நாள்களில் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதும் பெரும்பாலும் உறுதியாகி வருகின்றது.
இந்தப் பின்புலத்தில்தான் இப்போது நாடாளுமன்றத்தில் இருக்கும் எம்.பிக்கள் பலரும் தங்களின் அரசியல் எதிர்காலம் குறித்துத் திட்டமிட்டு வியூகம் அமைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் யார் வெல்வார்கள் என்று கணிப்பிட்டு அவர்களின் பின்னால் சேருவதிலும் பார்க்க -
யார் வென்றாலும், அதன் பின்னர் விரைந்து வரப் போகின்ற பொதுத்தேர்தலில் எந்தத் தரப்புடன் அணி சேர்ந்தால் தத்தமது மாவட்டத்தில் தாங்கள் வெற்றியை வரும் தேர்தலில் உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்பதைக் கணக்கிட்டு அதன் அடிப்படையில் அணி சேரவே அவர்கள் ஒவ்வொருவரும் முயற்சிக்கின்றார்கள் என்று கூறப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தலில் யார் வெல்வார்கள் என்பதை விட, அதன் பின்னர் வரும் பொதுத் தேர்தலில் எந்த அணியில் நின்றால் தங்கள் மாவட்டத்தில் தாங்கள் தேர்வாக முடியும் என்பதுதான் அவர்களுக்குப் பிரச்சினை.
அவனவனுக்கு அவனவன் பிரச்சினை...!