- by Editor
- 2 years ago
இரகசியம் - பரகசியம் (27.01.2024)
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கிய நாள் இன்று. கட்சியின் செல்நெறியைத் தீர்மானிக்கப் போகும் நாள் என்றும் கூறலாம்.
கட்சியைக் கட்டுக்கோப்பாக - பல தரப்பினரையும் அரவணைத்து - ஐக்கியமாக - அதன் புதிய தலைவர் சிறீதரன் கொண்டு நடத்தப் போகின்றாரா அல்லது கட்சி பிளவுண்டு நிற்கப் போகின்றதா என்பதை இன்றைய நடவடிக்கைகள் தீர்மானிக்கப் போகின்றன.
தலைவர் தேர்தலில் ஏற்பட்ட பிளவு - முரண்பாடு - கட்சிக்குள் தொடர்ந்தும் நீடிக்க போகின்றதா என்பது திருகோணமலையில் இன்று நடக்கும் கட்சியின் மத்திய குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்களின் போது தெளிவாகும் என எதிர்பார்க்கலாம்.
கட்சித் தலைவர் பதவியேற்கும் சிறீதரனுக்குக் கட்சியை ஐக்கியப் படுத்திக் கொண்டு செல்ல ஆவன செய்யுங்கள் என்று பல தரப்புகளில் இருந்தும் கூறப்பட்டு விட்டன என அறிய வந்தது.
தலைவர் தெரிவுக்காக அணி சேர்ந்து, கன்னை பிரிந்த தரப்புகளின் அழுத்தங்களுக்கு விட்டுக் கொடுத்து, அடி பணிந்து, கட்சியின் பிளவு நிலையை நீடித்து, நிரந்தரமாக இடமளிப்பதா, இல்லையா என்பதை அவரே தீர்மானித்துக் கூட்டத்தை வழி நடத்த வேண்டும்.
நேற்று யாழ்ப்பாணத்தில் கட்சியின் தற்போதைய தலைவர் மாவை சேனாதிராஜா, சிரேஷ்ட துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், நிர்வாகச் செயலாளர் குலநாயகம் ஆகியோரின் வீடுகளுக்குத் தேடிச் சென்று சுமார் 10, 15 நிமிட நேரம் அவர்கள் ஒவ்வொருவருடனும் உரையாடி இருக்கின்றார் நாளை கட்சியின் புதிய தலைவர் பதவியை ஏற்கவிருக்கும் சிறீதரன்.
இந்தச் சந்திப்புக்களின் போதும் சரி, நேற்றுக் காலை சுமந்திரனுடன் தொலைபேசியில் சில நிமிடங்கள் உரையாடிய போதும் சரி, இன்றைய கூட்டத்தில் கட்சியின் புதிய நிர்வாகிகள் தெரிவு குறித்த விவரம் எதையும் சிறீதரன் கோடி காட்டவேயில்லை எனத் தெரிகின்றது. வெறுமனே, எல்லோருமாகச் சேர்ந்து இணக்கமாக இன்றைய கூட்டத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்று பொத்தம்பொதுவில் சிறீதரன் கூறியமையோடு விடயம் அடங்கிவிட்டது.
சமரசமாக - சமாதானமாக - எல்லோரையும் அரவணைத்து - கட்சியை நடத்துகிறேன் என்று படம் காட்டுவது போல இந்த 'வீடு தேடி விசிட்' நடத்திய நிகழ்வு அமைந்துள்ள போதும், இவர்கள் அனைவருக்கும் - மாவை, சிவஞானம், குலநாயகம், சுமந்திரன், சத்தியலிங்கம் போன்ற அனைவருக்கும் - நிர்வாகிகள் பதவியில் எந்த இடமும் இல்லை என்பதுதான் இப்போது கட்சிக்குள் கை ஓங்கி இருக்கும் சிறீதரன் அணியின் திட்டம் என்கின்றன உள் வீட்டு வட்டாரங்கள். மத்திய குழு, அரசியல் குழு போன்றவற்றின் தெரிவுகளிலும் இந்த வெட்டுத் தொடரும் என எதிர்வு கூறப்படுகின்றது.
ஒரு புறம் கட்சிக்குள் இடமில்லை என்று புறமொதுக்கிக் கொண்டு, மறுபுறம் வீடு தேடிச் சென்று அரவணைக்கும் பாவனை. நல்ல நடிகர்தான் நாம் புதிய தலைவர்....!
ஆயினும் கட்சியின் பொதுக்குழு கூடிய விதம், அழைக்கப்பட்டோர், வாக்களிக்க அனுமதிக்கப்பட்டோர், கூட்டம் நடத்திய முறைமை எல்லாம் தீவிர கண்காணிப்புக்கும் பரிசீலனைக்கும் நுணுக்கமான பதிவுகளுக்கும் உள்ளாகி வருகின்றன. விளைவு - பிரதிபலிப்பு - பெப்ரவரியில் தெரிய வரலாம் என்கின்றன வேறு சில வட்டாரங்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.
***
நேற்று இந்தியக் குடியரசுத் தினம். கொழும்பில் இந்தியத் தூதரின் இல்லத்தில் வழமைபோல நேற்று மாலை நடந்த நிகழ்வில் கொழும்பின் அரசியல், இராஜதந்திர வட்டாரங்கள் பலவும் பிரசன்னமாகி இருந்தன. முன்னாள் ஜனாதிபதிகள் வரிசையில் மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன ஆகியோருடன் கோட்டாபய ராஜபக்ஷவும் வந்திருந்தார். தமிழர்கள் தரப்பில் சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் தென்பட்டனர்.
பதவியைத் துறந்த பின்னர் பொது நிகழ்வுகளில் பங்குபற்றாமல் அஞ்ஞாதவாசம் செய்து வந்த கோட்டாபய ராஜபக்ஷ அதை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கின்றார் போல.
ஆக, இனி அடிக்கடி அவரைப் பொது நிகழ்வுகளில் காணக் கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.