- by Editor
- 4 months ago
இரகசியம் - பரகசியம் (25.10.2024)
-
- by Editor,
- 1 year ago
- in இரகசியம் பரகசியம்
அறுகம்பே பகுதியில் இஸ்ரேலியப் பிரஜைகள் மீதான தாக்குதல் அச்சுறுத்தல் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என வெளிவிவகார மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் நேற்றுத் தெரிவித்திருக்கிறார்.
இந்த விடயத்தை ஒட்டி மேலும் இருவர் கிழக்கு மாகாணத்தில் பின்னர் கைதாகி இருக்கின்றனர் என ஒரு தகவல் தெரிவித்தது. அவருடன் சேர்த்து இந்த விடயத்தில் கைதானவர்கள் எண்ணிக்கை ஐந்து என்று கூறப்படுகின்றது.
கடந்த இருபதாம் திகதி அதிகாலை யாழ் மாவட்டம் சுன்னாகம் பகுதியில் வைத்து 42 வயதுடைய தமிழர் ஒருவர் இந்த விவகாரத்தை ஒட்டியே பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் முதலில் கைதானார் என்று கூறப்படுகின்றது.
மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் அலுவலக அதிகாரிகள் மேற்படி கைதான தமிழர் யாழ்ப்பாணத்தில் தடுத்து வைத்திருக்கின்றார் என கேள்விப்பட்டு அவரைப் பார்வையிடுவதற்காக பாதுகாப்புத் தரப்பினருடன் தொடர்பு கொண்டனர் என்றும், எனினும் அவர் நேற்றே கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டார் என்றும் யாழ் மனித உரிமைகள் அலுவலகத் தரப்புக்குப் பதிலளிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
இதேசமயம் இலங்கையில் அமெரிக்கப் பிரஜைளுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதான அறிவிப்பை நேற்று முன்தினம் அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட அதேசமயம், அன்று காலையில் இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங் அம்மையார் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். வடக்கு ஆளுநர் உட்பட சில தரப்புகளை அவர் சந்தித்தார் எனத் தெரிகிறது.
இந்தப் பாதுகாப்புச் சிக்கல் விவகாரங்களை ஒட்டி முதல் நபர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டு நேற்று வரை யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சமயத்தில்தான், அமெரிக்க தூதுவரின் யாழ். விஜயமும் இடம்பெற்றிருக்கின்றது என்று சில வட்டாரங்கள் தொடர்பு படுத்தி தகவல் வெளியிட்டிருக்கின்றன.
இதே சமயம் கைது செய்யப்பட்ட அந்த நபருக்கு வன்னியில் தேர்தலில் போட்டியிடும் ஒரு பிரமுகருடன் தொடர்பு இருப்பதாகவும், இந்த நபரும் அந்தப் பிரமுகரும் தென்னிலங்கைச் சிறைகளில் ஒரே சமயத்தில் காவலில் இருந்த போது ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்றும் ஒரு தகவல் தெரிவிக்கின்றது.
அது பற்றிய விடயங்களும் புலனாய்வில் இருப்பதால் அது குறித்து அதிகம் பிரஸ்தாபிக்காமல் விட்டுவிடுவோம்.