Tuesday, October 6, 2026

21 ஆம் திகதி வரையில் அமைதி காலம் அமுலில்: தேர்தல்கள் ஆணைக்குழு


நேற்று நள்ளிரவுடன் தேர்தல் பிரசார கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் தற்போது அமைதி காலம் அமுலில் இருப்பதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் இந்த அமைதி காலம் நடைமுறையில் இருக்கும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த காலப்பகுதியில் தேர்தல் பிரசாரம், பேரணி, துண்டுப் பிரசுர விநியோகம் மற்றும் வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏதேனும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், எந்தவொரு வாக்காளரையும் குறிப்பிட்ட நபருக்கு வாக்களிக்குமாறு அல்லது தேர்தலைப் புறக்கணிக்குமாறு அச்சுறுத்தல் விடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான ஏதேனும் முறைப்பாடுகள் கிடைக்குமாயின், அதற்கு எதிராக உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேநேரம், விருந்து உபசாரங்களை ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக கையூட்டல் தொடர்பான சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும்.

இதேவேளை நாடாளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர்களின் 13,314 தேர்தல் செயற்பாட்டுக் காரியாலயங்கள் இன்று நள்ளிரவுடன் அகற்றப்பட வேண்டும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று நள்ளிரவு முதல் தேர்தல் தொகுதிக்கு ஒரு காரியாலயம் என்ற அடிப்படையிலும், வேட்பாளர்களின் இல்லத்திலும் தேர்தல் செயற்பாட்டுக் காரியாலயத்தை நடத்திச் செல்ல முடியும் என அந்த ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கெடுப்பு நிலையத்திலிருந்து 500 மீற்றருக்கு உட்பட்ட பகுதியில் காணப்படும் தேர்தல் செயற்பாட்டுக் காரியாலயங்களும் அகற்றப்பட வேண்டும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

you may also like