Saturday, October 10, 2026

இரகசியம்- பரகசியம் (21.05.2024)


இன்று நீண்ட - ஆழமான - விடயம் எதுவும் இல்லை. சுருக்கமான ஒரு ஹாஸ்யத் தகவல்தான். அதுவும் கொழும்பில் பத்திரிகை ஆசிரியரான நண்பர் ஒருவர் கேட்ட கேள்வி ஒன்றை வாசகர்களுடன் பகிரப் போகிறேன். அவ்வளவுதான்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய நிலைமை நம் எல்லோருக்கும் ஓரளவு தெரிந்ததே.

மைத்திரிபால சிறிசேன அணியும், சந்திரிகா அணியும் மாறி மாறி மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குகளைத் தாக்கல் செய்து, பெறுகின்ற இடைக்கால உத்தரவுகளையும் விளைவுகளையும் புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறுகின்றார் மிஸ்டர் பொதுஜனமான நம் வாசகர்.

ஒருநாள் மைத்திரியின் தலைமைக்கு இடைக்கால தடை. சில நாள்கள் சென்றதும் அவரின் இடத்துக்குக் கட்சியின் பதில் தலைவராகத் தெளிவானவர் என்று கூறப்படும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷவுக்குத் தடை. பிறகு அதுவரை பதில் பொதுச் செயலாளராகக் கடமையாற்றிய மித்ரபாலாவுக்குத் தடை. இதற்கிடையில் சந்திரிகா அணி தாங்கள் கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவையும், பதில் பொதுச் செயலாளராக துமிந்த திஸநாயக்கவையும் தெரிவு செய்தனர் என்று அறிவிப்பு. அதனிடையே மைத்திரிபால சிறிசேன தலைமை பதவியில் இருந்து விலகுவதான அறிவிப்பும், நீதிமன்றத்தினால் பதில் தலைவராக செயல்படத் தடை விதிக்கப்பட்ட அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ கட்சியின் புதிய தலைவர் என்று அறிவிப்பும் வெளியாகின.

தொடர்ந்து அவர் தலைவராகச் செயற்படுவதற்குக் குந்தகம் விளவிக்கக் கூடாது என்று கடுவெல மாவட்ட நீதிமன்றம் உத்தரவு என்ற செய்தி. இப்போது விஜயதாஸ ராஜபக்‌ஷ தலைவராகச் செயல்பட கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மீண்டும் இடைக்கால தடை. - இப்படி மாறி மாறி வரும் செய்திகளைப் பார்த்துக் குழம்பி, சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்த்த நிலையில் நம்முடைய வாசகர்கள் தடுமாறி போய் இருக்கிறார்கள். கட்சி யாருடைய கட்டுப்பாட்டில் இப்போது இருக்கின்றது என்று புரியாத குழப்பம் பலருக்கும்.

இந்தச் சமயத்தில்தான் பத்திரிகை ஆசிரியரான அந்த நண்பர் நேற்று தொலைபேசி அழைப்பு எடுத்தார்.

'' அண்ணே! 'கரகாட்டக்காரன்' படம் பார்த்தீர்களா? அதில் செந்திலுக்கு கவுண்டமணி வழமை போல நான்கு சாத்துச் சாத்தும் கட்டம் நினைவில் இருக்கின்றதா?'' - என்று எடுத்த எடுப்பிலேயே கேட்டார் அவர்.

''ஆம். படம் பெரும்பாலும் முழுமையாக நினைவில் இருக்கிறது'' என்றேன் நான்.

''ஏன் செந்திலுக்கு இப்படிப் போட்டு அடிக்கின்றீர்கள் என்று கதாநாயகன் ராமராஜன் கவுண்டமணியிடம் கேட்பார். 'கேட்கக் கூடாத கேள்வி ஒன்றைக் கேட்டு விட்டான். அதுதான் அடித்தேன்' என்று பதில் அளிப்பார் கவுண்டமணி. 'அப்படி என்ன கேள்வி கேட்டார்?' என்று மீண்டும் வினாத் தொடுப்பார் ராமராஜன். அதற்கு கவுண்டமணி அந்தக் கேள்வி என்ன என்று சொல்லுவார். உங்களுக்கு அது நினைவில் இருக்கின்றதா?'' - என்று கேட்டார் என் நண்பர்.

நாமதான் இந்த சினிமா நகைச்சுவை விடயங்களைப் பார்த்து, ரசித்து,சுவைத்து அதில் மாஸ்டர் டிகிரி வாங்கியவராயிற்றே என்ற எண்ணம் நமக்கு உண்டு அல்லவா? அவர் கேட்டதும் படார் என்று பதில் சொன்னேன்.

''சொப்பன சுந்தரி வைத்திருந்த கார் இது. இப்போது நாம அதை வைத்திருக்கிறோம். சரி, சொப்பன சுந்தரியை இப்ப யார் வச்சிருக்கிறார்கள் என்றுதானே செந்தில் கேட்டார் எனக் கவுண்டமணி கூறுவார்!'' என்றேன் நான்.

''கனகச்சிதமான பதில். அதுதான் இப்போது என் கேள்வியும். சுதந்திர கட்சியை இப்போது யார் வைத்திருக்கிறார்கள்?'' - என்றார் என் நண்பர்.

நான் சிரித்துக் களைத்துப் போனேன்.

''அதுதான் மக்களின் இன்றைய சந்தேகமும்!'' - என்றேன்.

என் நண்பர் இன்னொரு விடயத்தையும் சொன்னார். அதனையும் குறிப்பிட்டாக வேண்டும்.

சுதந்திரக் கட்சியின் தலைவர் நான்தான் என்று இப்போது இரு அமைச்சர்கள் உரிமை கோருகிறார்கள். ஒருவர் விஜயதாஸ ராஜபக்‌ஷ. மற்றவர் நிமால் சிறிபால டி சில்வா. ஒரு கட்சியின் தலைமைக்கு உரிமை கோரி எதிரும் புதிருமாக மோதிக் கொண்டிருக்கும் இரு அமைச்சர்களை தமது அமைச்சரவைக்குள்ளேயே வைத்து, அசமாத்தம், சத்தம் சந்தடியின்றி, அமைதியாக ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எப்பேர்ப்பட்ட அரசியல் கில்லாடி என்று அவர் கேள்வி எழுப்பினார்.

நியாயமான கேள்விதான். அதுதான் ரணில் விக்கிரமசிங்க என்ற நரித் தந்திரசாலியின் தனித் திறமை என்றேன் நான். 

you may also like