- by Editor
- 2 years ago
வட கொரியாவில் புதிய யுரேனியம் செறிவூட்டும் ஆலை - சர்வதேச அணுசக்தி முகமை கடும் கவலை
வட கொரியா இரண்டு மாடிகளைக் கொண்ட புதிய யுரேனியம் செறிவூட்டும் ஆலையொன்றை அமைத்துள்ளதாகவும், இது தங்களுக்கு “கடுமையான கவலையை” ஏற்படுத்தியுள்ளதாகவும் சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) தலைவர் ரஃபேல் க்ரோசி தெரிவித்துள்ளார்.
கடந்த மாத இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையில், வட கொரியா மற்றொரு யுரேனியம் செறிவூட்டும் நிலையத்தில் விரிவாக்கப்பட்ட துணை ஆலையையும் இயக்கத் தொடங்கியுள்ளதாக IAEA தெரிவித்துள்ளது.
வட கொரியாவின் அணுசக்தி உள்கட்டமைப்பு தொடர்ச்சியாகவும் சீராகவும் விரிவுபடுத்தப்பட்டு வருவதை இந்தக் கண்டுபிடிப்புகள் எடுத்துக்காட்டுவதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
வட கொரியாவின் அணுசக்தித் திட்டத்தின் தொடர்ச்சியான மற்றும் மேலதிக வளர்ச்சி, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தொடர்புடைய தீர்மானங்களை வெளிப்படையாக மீறும் செயற்பாடாகும் என IAEA இயக்குநர் ரஃபேல் க்ரோசி தெரிவித்துள்ளார்.
மேலும், இது மிகவும் கவலைக்குரியதும் வருந்தத்தக்கதுமான விடயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த ஜூன் 3ஆம் திகதி வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன், புதிதாக திறக்கப்பட்ட அணுப் பொருள் உற்பத்தி தொழிற்சாலையொன்றை பார்வையிட்டதாக IAEA தெரிவித்துள்ளது.
குறித்த நிலையம் யோங்பியோன் (Yongbyon) அணு உலைத் தொகுதியில் அமைந்துள்ள யுரேனியம் செறிவூட்டும் ஆலையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் IAEA குறிப்பிட்டுள்ளது.