Tuesday, October 13, 2026

இரகசியம் - பரகசியம் (19.12.2023)


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு - நான் அடிக்கடி கிண்டலாகக் குறிப்பிடும் பிள்ளையார் கல்யாணம் என்ற விவகாரம் - நாளை, நாளை என்று தள்ளிப் போய், கடைசியாக அடுத்த மாதத்தில் - 2024 ஜனவரியில் - நடைபெறத்தான் போகின்றது போலும்.

அதைத் தள்ளிப் போடுவதற்கும், அதன் மூலம் பத்தாண்டுகளாகும் தலைமைப் பதவியில் தொடர்ந்தும் நீடிப்பதற்கும், கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா நேற்றுக் கடைசி நேரம் வரை எடுத்த தீவிர முயற்சி சரிவராமல் போயிற்று.

நேற்று திருகோணமலையில் கட்சியின் அரசியல் குழுவும், மாநாட்டை நடத்தும் ஏற்பாட்டுக் குழுவான கட்சியின் திருவோணமலை மாவட்ட குழுவும் ஒன்றிணைந்து நடத்திய கூட்டத்தில் இந்தத் தேசிய மாநாட்டைத் தள்ளிப் போடச் செய்ய கட்சியின் தற்போதைய தலைவர் மாவை சேனாதிராசா எடுத்த தீவிர முயற்சிகள் முகத்தில் அடித்தால் போல கூட்டத்தில் பங்குபற்றியோரால் முறியடிக்கப்பட்டது.

இதில் அவருக்கு உள்ள சோகம் என்னவென்றால், கூட்டத்தில் பங்கு பற்றிய யாருமே மாநாட்டை ஒத்திவைக்கும் அவரது பேச்சைக் கேட்கவே இல்லை. எல்லோரும் ஒன்றுபட்டு, திட்டமிட்ட திகதியில் மாநாட்டை நடத்தியே முடிக்க வேண்டும் என்று ஒரே பிடியாக - விடாப்பிடியாக - நின்றமையினால் வேறு வழியின்றி அதற்குத் தலைவரும் இணங்க வேண்டியவரானார். அவருக்கு சார்பாக நிற்பார் - அவரின் ஆள் - என்று கருதப்பட்ட கட்சியின் பொருளாளர் கனகசபாபதி கூட மாநாட்டை ஒத்திவைக்கும் அவரது வலியுறுத்தலுக்குத் தலை சாய்க்கவில்லை.

நேற்றுக் கூட்டம் ஆரம்பமானதுமே மாநாட்டை ஒத்திவைப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்ற புராணத்தைத் தொடங்கினார் மாவையர். திருகோணமலை மாவட்டக் கிளை தெரிவுகள் தொடர்பில் சம்பந்தன் ஆட்சேபனை தெரிவித்திருக்கின்றார், அந்தத் தெரிவுகளைத் திருத்தி, மாற்றி அமைத்த பின்னர்தான் மாநாட்டை நடத்தலாம் என்று தனது வழ்மையான பல்லவியைத் தொடங்கினார் மாவையர். கூட்டத்தில் பங்கு பற்றிய எல்லோருமே அதற்கு மாறி, மாறிப் பதிலடி கொடுத்தனர். குறிப்பாக திருகோணமலை மாவட்டப் பிரதிநிதிகள் கடுமையாக நின்றனர்.

இதில் இன்னொரு பின்புல இரகசியமும் உண்டு. அடுத்த தலைவர் பதவிக்கு நேரடிப் போட்டியில் இறங்கியிருக்கும் சுமந்திரனும் ஸ்ரீதரனும் மாநாட்டை ஒத்திவைக்கும் எத்தனத்திற்கு எக்காரணம் கொண்டும் இடம் அளிப்பதில்லை என்று தங்களுக்குள் முன்கூட்டியே பேசித் தீர்மானித்துக் கொண்டுதான் கூட்டத்துக்கே வந்திருந்தனர்.

கட்சியின் தேசிய மாநாடு இம்முறையும் நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்படுமானால் இலங்கைத் தமிழரசுக் கட்சி குறித்து தமிழ்ச் சமூகமே சிரிக்கும் என்பதுதான் ஸ்ரீதரனின் நிலைப்பாடு. அப்படி ஏளனத்திற்கும் பரிகாசத்துக்கும் உள்ளாகும் கட்சியின் தலைமைப் பொறுப்பை, அதற்குப் பின்னர் தாம் ஏற்று எப்படிக் கட்சியை மேம்பாடடையச் செய்ய முடியும் என்ற கவலை அவருக்கு.

மாநாட்டை ஒத்திவைப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்று மாவை பேசத் தொடங்கியதும் சுமந்திரன் வழிமறித்தார். மாநாடு இம்முறை ஒத்திவைக்கப்பட்டால் இனிக் கட்சி எதிர் நோக்கக்கூடிய முக்கிய பிரச்சினைகளை சுமந்திரன் சட்டரீதியான பின்புலப் பார்வையில் தெளிவுபடுத்தினார். கட்சிக்கு ஏற்படக்கூடிய கதிக்கு - பாரிய பின்னடைவுக்கு - நீங்களே (மாவை சேனாதிராசாவே) பொறுப்பை - வரலாற்றுப் பழியை - ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று சுமந்திரன் சுட்டியதும் தீயை மிதித்தவர் போல துள்ளிக் குதித்து இடையில் குறுக்கிட்டுப் பதிலளித்தார் மாவையர்.

''நான் இல்லை, சாம் அண்ணன்(சம்பந்தன் அண்ணன்)தான் அப்படி சொன்னார்'' - என்று கட்சியினர் முன்தோன்றில் கருத்துக் கூற முடியாத சம்பந்தனை சாட்சிக்கு இழுத்தார் மாவை.

சுமந்திரன் விடவில்லை. ''அப்படியானால் கட்சிக்கு நேரக்கூடிய நிலைமைக்கு சம்பந்தன்தான் பொறுப்பேற்க வேண்டி நேரும். அது வரலாற்றுப் பழியாகவும் இருக்கும்'' என்ற சாரப்பட குளிசை கொடுத்தார் சுமந்திரன்.

தீவுப் பகுதி, கிளிநொச்சி உட்பட வடக்குக்கு மேலும் அதிக பொதுக்குழு உறுப்பினர்கள் இடமளித்தல், திருகோணமலை மாவட்டத்திற்கு மேலும் சில இடங்களை வழங்குதல், கொழும்பு கிளையின் சார்பில் மேலும் இரு பொதுக் குழு இடங்களை அளித்தல் என்பன போன்ற சில விட்டுக்கொடுப்புகள் செய்வதன் மூலம் ஏனைய குழப்பங்களுக்கு தீர்வு காண நேற்றைய கூட்டத்தில் இணக்கமாகத் தீர்மானிக்கப்பட்டது.

நேற்றைய கூட்ட முடிவுகளின் படி ஜனவரி 21 ஆம் திகதி தலைவர் மற்றும் ஏனைய உத்தியோகஸ்தர்கள் தேர்வு நடக்கும். கட்சியின் உத்தியோகபூர்வ மாநாடு 28ஆம் திகதி இடம்பெறும்.

கட்சித் தலைவர் தெரிவில் தற்சமயம் மூன்று பேர் உள்ளனர். சுமந்திரன், ஸ்ரீதரன் மற்றும் யோகேஸ்வரன். போட்டியிலிருந்து யாரும் விலகுவதற்கான கடைசி தினம் நாளை ஆகும். எனினும் மூவரில் எவரும் விலகிக் கொள்வதற்கான சாத்தியங்கள் தென்படவில்லை என்பதுதான் கள நிலைமை. 

you may also like