- by Editor
- 4 months ago
இரகசியம் - பரகசியம் (19.04.2026)
-
- by Editor,
- 5 months ago
- in இரகசியம் பரகசியம்
அரிச்சந்திரன் போல(?) 'உண்மை பேசுகின்றமையால்' மக்கள் மத்தியில் பெயர் பெற்றவர் நமது அமைச்சர் சந்திரசேகரன். எப்போதும் தேர்தலில் தம்மை முன்நிறுத்தி மக்களைச் சந்திக்காதவர். தேசிய பட்டியல் பின் கதவால் நாடாளுமன்றத்துக்குள் புகுந்தவர் - பட்டத்து யானை மாலை போட்டதனால் வீதியோரப் பிச்சைக்காரி பட்டத்து ராணியான கதையை 'சரஸ்வதி சபதம்' படத்தில் பார்த்திருப்போம். அந்த மாதிரி அமைச்சர் பட்டத்துக்கு வந்தவர்.
தனது சக அமைச்சர் நாடாளுமன்றத்தில் பகிரங்கமாகக் கூறிய கூற்றையே அப்படி அவர் கூறவே இல்லை என்று நூறுக்கு ஆயிரம் சதவீதம் உறுதிப்படுத்திக் கூறி, தமது உண்மைத்தனத்தை(?) அண்மையில் கூட நிருபித்தவர்.
அத்தகையவர் தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள பிரதேசத்தை நில அளவை செய்து இரண்டு வாரத்துக்குள் மக்களுக்கு மீளளிக்க போகின்றோம் என்று உறுதி கூறியமையையும் அதே மாதிரி நூற்றுக்கு ஆயிரம் வீதம் உண்மை என்று மக்கள் நம்பி விட்டார்கள்.
அந்த அடிப்படையில் - நம்பிக்கையில் - காணி அளவிட சென்ற காணி உரிமையாளர்களுக்கு நேர்ந்த அனுபவம் தெரிந்த விடயம்தான். ஆகவே அவை பற்றி நான் இங்கு விவரிக்கப் போகவில்லை.
ஆனால் காணி அளவிடப் போகின்றோம் என்று அவர் அறிவித்த சமயத்தில், அங்கிருந்த பத்திரிகையாளர்கள் அவரிடம் நேரடியாக ஒரு கேள்வியை கேட்டார்கள். அதற்கும் அரிச்சந்திரன் பாணியில்தான் அவர் உண்மை பேசி பதிலளித்திருக்கிறார். அந்தக் கேள்வி - பதிலை ஒரு தடவை அப்படியே பார்ப்போம்.
கேள்வி :- இந்த முடிவுக்கு (காணி அளவீடு செய்யும் முடிவுக்கு) தையிட்டி திஸ்ஸ விகாராதிபதி இணக்கம் தெரிவித்திருக்கின்றாரா?
பதில் :- எல்லோருடைய இணக்கப்பாட்டிலுமே செய்கின்றோம்.
கேள்வி :- அவருடைய (விகாராதிபதியுடைய) கோரிக்கைகள் ஏதாவது....?
பதில் :- அவரிடம் எந்தவிதமான கோரிக்கையும் இல்லை. அவர்கள் விடுவதற்கு 'ரெடி'யாக இருக்கின்றார்கள். ஒருவேளை திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியிலும் கூட ஒரு சில பிரதேசங்கள் மக்களுக்கு சொந்தமான காணியாக இருக்கிறது. 17 பேருக்கு சொந்தமான காணிகள் இருக்கின்றன. அது சம்பந்தமாகவும் பரிசீலிக்க நாங்கள் முடிவுகள் எடுத்து இருக்கிறோம்.
- இதுதான் அரிச்சந்திர மகாராஜாவான அமைச்சர் சந்திரசேகரன் கூறிய கூற்று.
ஆனால் காணி அளவிட தீர்மானிக்கப்பட்ட திகதிக்கு முதல் நாள் சட்டவிரோத திஸ்ஸ விகாரையை ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டி, அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் விகாரதிபதி நேரடியாக பொலிஸுக்குச் சென்று தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசத்தை - நிலத்தை - தன்னுடைய அனுமதி இல்லாமல் அளவிட முயற்சிக்கின்றார்கள், அதற்கு அனுமதிக்க முடியாது என்று முறைப்பாடு செய்திருக்கிறார்.
ஆகவே, அளவீடு செய்ய உத்தேசிக்கப்பட்ட காணிப் பரப்பை மக்களிடம் கைவிடுவதற்கு திஸ்ஸ விகாராதிபதி 'ரெடி'யாக இருக்கிறார்கள் என்று நமது அரிச்சந்திர மகாராஜா அமைச்சர் கூறிய கூற்று எவ்வளவு தூரம் உண்மையானது என்பது மீண்டும் இரண்டொரு நாள்களுக்குள்ளேயே அம்பலமாகிவிட்டது.
பொய்யுக்கு மேல் பொய் கூற, அது இரண்டொரு நாள்களிலேயே அம்பலமாகி விடுவதுதான் அமைச்சர் சந்திரசேகரனுக்கு விசனத்தைத் தருவதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.