- by Editor
- 1 year ago
இரகசியம் - பரகசியம் (19.03.2024)
இது வெக்கை காலம். சூடு கிளப்பும் இந்த உஷ்ணம் வேறு சில பிரச்சினைகளையும் தருவதாக காலி காரப்பிட்டிய வைத்தியசாலையின் மனநல மருத்துவர் ரூமி ரூபன் கூறுகின்றார்.
அதிக உஷ்ணம் - சூடு - உடல் ரீதியாக மட்டுமல்லாமல், மனரீதியாகவும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது என்கின்றார் அவர்.
உஷ்ணத்தின் பாதிப்பால் மனவலிமை குறைகின்றது. அது மன குழப்பங்களுக்கு ஆளாக நேரிடும் ஆபத்துக்களை தாராளமாக தரும் என்று அவர் முற்கூட்டியே எச்சரிக்கின்றார்.
உஷ்ணத்தால் மனவலிமை குறைந்து, பாதிப்புகள் ஏற்படுகின்றமை ஆராய்ச்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கின்ற என்கிறார் அவர்.
அதிக உஷ்ணம் கவனச்சிதறல், அசிரத்தை, அயர்ச்சி போன்றவற்றைத் தரும்.
குழந்தைகள் மனவலிமை குறைந்து, பாடங்களை மறப்பர் அல்லது கவனிக்க முடியாமல் அசிரத்தையாகச் செயல்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இந்தக் காலகட்டத்தில் பெற்றோர் - பிள்ளைகள் முரண்பாடுகள், கணவன் - மனைவி நெருடல்கள், குடும்பத் தகராறுகள், அயலவர்களுடன் பிரச்சினைகள், தரப்புகளுக்கிடையே மோதல்கள் என்று விபரீதங்கள் தம்பாட்டில் கட்டவிழும் என்கிறார் அந்த மருத்துவர்.
உடலால் அதிகமாக உணரப்படும் வெப்பம் காரணமாக சில கட்டுப்பாடுகளை மூளையும் பிற அவயவங்களும் கூட இழக்கின்றன என்று சுட்டிக் காட்டப்படுகின்றது.
இதுதான், இக்காலகட்டத்தில் வீதி விபத்துக்கள் அதிகரிப்பதற்கும் காரணம் என்கின்றார் அவர்.
அதிக வெப்பம், மனநோயை உண்டாக்குகின்றது. மன நோய் உள்ளவர்களில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. கவனக் கோளாறுகள், மனவிரக்தி, மனச்சலனம் போன்றவற்றை சூடு இயல்பாகவே மூளைக்குள் ஏற்படுத்துவதாகக் கூறப்படுகின்றது.
என் நண்பர் ஒருவரிடம் இந்த விடயம் குறித்து நேற்றிரவு தொலைபேசியில் பிரஸ்தாபித்தேன். அவர் நையாண்டியாக ஒரு கருத்துச் சொன்னார்.
''உதைத்தான் அந்தக் காலத்தில் 'நட்டு கழருகிறன்து' என்றார்கள். சூடு கூடி நட்டு விரிவடைந்து, வேகமாகக் கழற, விடயம் லூசாகி, குழப்பம் ஏற்படும்'' - என்று தன் கிண்டல் பாணியில் பதில் தந்தார் அந்த நண்பர்.
எது,எப்படியோ.... அடுத்து வரும் நாள்களில் உஷ்ணம் எகிறும் என்கிறார்கள். எல்லோரும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.