- by Editor
- 2 weeks ago
இரகசியம் - பரகசியம் (18.4.2025)
-
- by Editor,
- 1 year ago
- in இரகசியம் பரகசியம்
நேற்று 'மாலை முரசு' இரண்டாம் பக்கத்தில் 'பிள்ளையான்தான் தேசப்பற்றாளன்; அடித்துக் கூறுகின்றார் உதய கம்மன்பில' என்று ஒரு செய்தி வெளியாகியிருந்தது.
அதை வாசித்து விட்டு வெளிநாட்டிலிருந்து வயதில் மூத்த ஒரு நண்பர் தொலைபேசி அழைப்பு எடுத்தார். அவர் அது குறித்து என்னோடு உரையாடிய விடயங்களை உங்களுடன் பகிர்வதற்கு முன்னர், இந்த விடயத்தை ஒட்டி என் நினைவுக்கு வந்த எனது இளமைக்கால அனுபவம் ஒன்றைக் குறிப்பிடுவது பொருத்தமானது என நினைக்கிறேன்.
அப்போது எனக்கு 17 அல்லது 18 வயது இருக்கலாம். 1976 அல்லது 1977 ஆரம்பமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
அதுவரை காலமும் எனது சொந்த ஊரான திருகோணமலையின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இலங்கைத் தமிழரசு கட்சியின் நேமிநாதன் 1977 பொதுத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவு எடுத்திருந்தார். தமிழரசுக் கட்சியின் அடுத்த வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்த நேரம் அது. சம்பந்தனின் பெயர் அந்த இடத்துக்கு அச்சமயத்தில் அடிபடவில்லை. மூதூர் எம்.பியாக இருக்கும் தங்கத்துரை சில சமயங்களில் திருகோணமலை தமிழரசு வேட்பாளராக நிற்கக் கூடும் என்று பேச்சு அடிபட்டதாக நினைவு.
தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாகியிருந்த வேளை அது என்றும் நினைக்கிறேன். கட்சியின் பிரதான பேச்சாளராக அமிர்தலிங்கம் இருந்தார். அவர் அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் அல்லர். ஆனால் கூட்டங்களில் அவரது பேச்சை செவிமடுப்பதற்கு மக்கள் திரள்வது வழமை.
திருகோணமலையில் முற்றவெளியில் ஒரு பொதுக்கூட்டம். முன்னிரவு நேரம்.அந்த வேளையில் அரசியல் ஈடுபாடு இல்லாவிட்டாலும் வேடிக்கை பார்ப்பதற்காக அத்தகைய கூட்டங்களுக்கு நான் ஆஜராகி விடுவது உண்டு. கூட்டணியின் அந்தக் கூட்டங்களில் கடைசியில் அமிர்தலிங்கம் பேசுவார். அவர் பேசி முடிந்த பின்னர் பொதுமக்களின் கேள்வி நேரம். பொதுமக்கள் தங்கள் கேள்விகளை தாளில் எழுதி மேடைக்கு அனுப்புவார்கள். மேடையின் ஒரு புறத்தில் இருந்து அமிர்தலிங்கம் பதிலளிக்க, மறுபக்கத்தில் நின்று ஒருவர் ஒவ்வொரு கேள்வியாக வாசிப்பார். இது அந்த காலத்தில் ஒரு முறைமை. அந்தக் கேள்வி - பதிலை செவிமடுப்பதற்காக கூட்டம் காத்திருக்கும்.
எந்தக் கேள்விக்கும் சிலேடையான - நையாண்டியான - ஒரு பழமொழியோடு பதில் சொல்லுவார் அமிர்தலிங்கம். கேள்வி கேட்டு முடிப்பதற்கு இடையில் அவரது பதில் சடார் என்ற வேகத்தில் வரும்.
ஏற்கனவே திருகோணமலை தொகுதியில் தமிழரசுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியில் ஒருவர் அடிக்கடி பிரதான வேட்பாளராக முன்னிலையில் அங்கு போட்டியிட்டு வந்தார். அவரும் எனக்கு ஒரு வகையில் உறவினரே. அவரது மகனும் அன்றைக்குக் கூட்டத்துக்கு வந்திருந்தார். சற்றுத் தொலைவில் எங்களுடைய திருவோணமலை செய்தியாளர் சி.குருநாதன் தமது சைக்கிளோடு நின்றபடி கூட்டச் செய்திகளைக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். அவருக்குப் பக்கத்தில் அந்த ஐ.தே.க. பிரமுகரின் மகன் நின்றார்.
நேமிநாதன் இம்முறை போட்டியிடாவிட்டால் அந்த இடத்துக்கு மேற்படி ஐக்கிய தேசியக் கட்சியின் பிரமுகர் தமிழர் விடுதலைக் கூட்டணி பக்கம் பாய்ந்து, அதன் வேட்பாளராகக் களமிறங்கத் தயார் என்று ஒரு பேச்சு அடிபட்டது. அதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி இடம் அளிக்குமா என்று தெரியாத நிலைமை.
இந்தச் சமயத்தில் அந்த பிரமுகரின் மகனுக்குப் பக்கத்தில் நின்ற சில இளைஞர்கள் அது குறித்து அமிர்தலிங்கத்திடம் கேட்குமாறு அந்த பிரமுகரின் மகனைத் தூண்டினர். அவர் பிற்காலத்தில் 'ஒருவாறு' சட்டத்தரணியானவர். அச்சமயத்தில் சும்மா இருந்த இளைஞர்.
சக நண்பர்கள் தூண்டியமையால் அவர் எங்கள் பத்திரிகையாளர் குருநாதனிடம் ஒரு தாளையும் பேனாவையும் வாங்கி அந்தக் கேள்வியை எழுதி ஒரு பையன் மூலம் மேடைக்கு அனுப்பினார்.
''நேமிநாதன் இம்முறை தேர்தலில் போட்டியிட மாட்டார் எனத் தெரிகிறது. இதுவரை காலமும் ஐ.தே.கட்சியில் போட்டியிட்ட 'இன்ன' பிரமுகர் தமிழர் விடுதலைக் கூட்டணிப் பக்கம் வரத் தயாரானால் அவருக்கு இந்த முறை சீட் வழங்குவீர்களா?'' என்ற சாரப்பட அந்தக் கேள்வி அமைந்திருந்தது.
அந்தக் கேள்வி மேடையில் வாசிக்கப்பட்டதும் சடார் என்று பதில் வந்தது அமிர்தலிங்கத்திடமிருந்து.
''செத்தவன் பொண்டாட்டியைக் கட்டினாலும் விட்டவன் பொண்டாட்டியை கட்டக்கூடாது என்று சொல்லுவார்கள். இன்னொரு கட்சியை விட்டுக் குத்துக்கரணம் அடித்து வருபவருக்கு நாங்கள் இடம் கொடுக்க முடியாது'' - என்று படார் எனப் பதில் தந்தார் அமிர்தலிங்கம். கை தட்டல்களும் விசில்களும் காதைப் பிளந்தன. என்க்குப் பக்கத்திலிருந்தும் ஒரு விசில் காதைக் கிழித்தது. யார் என்று திரும்பிப் பார்த்தேன். அந்த ஐ.தே.க. பிரமுகரின் மகன். தந்தை குறித்து கிண்டலாகப் பதில் தந்த அமிருக்கு தனது விசிலினால் பாராட்டுத் தந்து கொண்டிருந்தார் அந்த இளைஞர்.
இப்படிப் பதிலளிப்பது அமிர்தலிங்கத்தின் பாணி.
ஐந்தாறு வருடங்கள் கழித்து 1982 ஜனாதிபதி தேர்தல் சமயம், பத்திரிகையாளராக இப்படி ஒரு கேள்வியை அமிர்தலிங்கத்திடம் கேட்டு, அவர் சிலேடைப் பழமொழியுடன் பதிலளித்த விடயம் எனக்கு இன்னமும் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருக்கின்றது.
அந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சிறிமாவோ பண்டாரநாயக்காவின் குடியுரிமை பறிக்கப்பட்டமையால் சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ஹெக்டர் கொப்பேடுவ போட்டியிட்டார். இலங்கையின் சரித்திரத்தில் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் அது. ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அதுவரை நாடாளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாகப் பதவி வகித்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன களத்தில் இருந்தார்.
இந்தத் தேர்தலில் பங்கு கொள்வதில்லை என்ற முடிவை தமிழர் விடுதலைக் கூட்டணி எடுத்திருந்தது. அந்தச் சமயத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அமிர்தலிங்கத்திடம் கொழும்பில் ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது நான் கேள்வி எழுப்பினேன்.
''இந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கு எதிரான உணர்வலைகள் தமிழர் பிரதேசத்தில் உச்சம் பெற்றிருக்கின்றன. அதனால் தமிழர் தேசத்தில் சுதந்திரக் கட்சி வேட்பாளர் ஹெக்டர் கொப்பேடுவ அமோக வெற்றியீட்டும் சாத்தியங்கள் தென்படுவதால், மறைமுகமாக ஜே.ஆருக்கு ஆதரவு திரட்டி தருவதற்காகவே நீங்கள் இந்தத் தேர்தலில் பங்கு பற்றுவதில்லை, நடுநிலை வகிப்பது என்ற முடிவை எடுத்திருக்கிறீர்கள் எனக் கூறப்படுகிறது. அது உண்மையா?'' - என்று நான் கேட்டேன்.
நான் கேள்வி கேட்டு முடிப்பதற்கு முன்னரே சீற்றத்துடன் பாய்ந்தார் அமிர்தலிங்கம்.
''அவர் என்ன சித்தப்பன், இவர் என்ன பெரியப்பனா? இருவருமே ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள். அதனால்தான் இருவரையும் நிராகரித்து, நாங்கள் தேர்தலில் பங்கு பற்றுவதில்லை என்ற முடிவை எடுத்தோம்'' எனச் சூடாகப் பதிலளித்தார் அமிர்தலிங்கம்.
இப்படி சீற்றத்துடன் அதே நேரத்தில் சிலேடையான பழமொழிகளுடன் பதிலளிப்பது அமிர்தலிங்கத்தின் பண்பு என்பதை சொல்வதற்காக இந்த இரண்டாவது சம்பவத்தைக் குறிப்பிட்டேன்.
சரி. இனி விடயத்துக்கு வருகிறேன்.
பிள்ளையானைப் புகழும் உதய கம்மன்பிலவின் கருத்துத் தொடர்பில் வெளிநாட்டில் இருக்கும் வயதில் மூத்த அந்த அன்பர் அமிர்தலிங்கம் பாணியில் எனக்குப் பதில் தந்தார்.
''விட்டவன் பொண்டாட்டியைக் கட்டக் கூடாது என்பார்கள். உவன் பிள்ளையான் விடுதலைப் புலிகளை விட்டு ஓடி வந்து காட்டிக் கொடுத்த ஆள். இப்போது அதே பாணியில் சிங்களத் தலைமைகளையும் காட்டிக் கொடுக்க பின்னிற்க மாட்டான். இது கம்மன்பிலக்கு புரியாமல் இருப்பது துரதிஷ்டம்'' - என்றார் அவர்.
''புலிகள் இயக்கத்தில் சாதாரண போக்குவரத்துச் சேவையின் பஸ் சாரதியாக இருந்த பிள்ளையான், காட்டிக் கொடுத்துத் துரோகம் செய்வதால் முதலமைச்சராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் நாட்டின் பிரதி அமைச்சராகவும் உயர முடிந்தது. நாளைக்கு சிறையில் இருந்து அடுத்த உயர் நிலைக்கு வருவதற்காக இதே கம்மன்பிலவைக் கூட காட்டிக் கொடுக்க பின்னிற்க மாட்டான்'' என்றார் அந்த வயதில் மூத்த நண்பர்.
இது என் கருத்தல்ல. அவர் கருத்து. அதைக் கேட்டபோது என் இளமைக் காலத்தில் அமிர்தலிங்கம் மேடையில் இருந்து சூடாக அளித்த பதில் எனக்கு நினைவுக்கு வந்தது. அதனால் அதனை இன்று வாசகர்களோடு பகிர்ந்து கொண்டேன். அவ்வளவுதான்...!