- by Editor
- 2 months ago
மீனவர்கள் மீதான துப்பாக்கிப் பிரயோகம்: இலங்கைக்கு இந்தியா கடும் கண்டனம்!
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
இந்திய மீனவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையின்போது இலங்கைக் கடற்படை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
"நெடுந்தீவுக்கு அருகாமையில் நேற்று அதிகாலை 13 இந்திய மீனவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளின்போது இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த மீன்பிடிப் படகில் இருந்த 13 மீனவர்களில் இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை, சிறு காயங்களுக்குள்ளான ஏனைய மூன்று மீனவர்களுக்கும் அதற்காகச் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களைப் பார்வையிட்ட யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய கொன்சுலேட் ஜெனரல் காரியாலய அதிகாரிகள், அவர்களை நலன் விசாரித்து அவர்களது தேவைகள் குறித்து அறிந்துகொண்டு மீனவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்குமான சகல சாத்தியமான உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.
புதுடில்லியில் உள்ள இலங்கையின் பதில் உயர் ஸ்தானிகர் நேற்றுக் காலை வெளியுறவுத்துறை அமைச்சுக்கு அழைக்கப்பட்டு இந்தச் சம்பவம் தொடர்பாக கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொழும்பில் உள்ள எமது உயர் ஸ்தானிகராலயம் இவ்விடயம் தொடர்பாக இலங்கை அரசின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளது.
வாழ்வாதாரம் தொடர்பான அக்கறையைக் கவனத்தில்கொண்டு மீனவர்கள் விவகாரத்தைப் பரிவுடனும் மனிதாபிமான அடிப்படையிலும் அணுக வேண்டியதன் அவசியத்தை இந்திய அரசு எப்பொழுதும் வலியுறுத்தி வருகின்றது.
எந்தச் சந்தர்ப்பத்திலும் எக்காரணத்துக்காகவும் பலத்தைப் பயன்படுத்துவதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்விடயம் தொடர்பாக இரு நாடுகளினதும் அரசுகள் இடையில் ஏற்கனவே உள்ள புரிந்துணர்வுகள் மிகவும் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும்." - என்றுள்ளது.