Saturday, October 10, 2026

இரகசியம் - பரகசியம் (18.05.2024)


தாம் ஜனாதிபதியாக இருந்த போது மேற்கொண்ட அல்லது மேற்கொள்ளத் தவறிய பல செயல்களுக்காக பல வழக்குகளை எதிர்கொண்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்த வழக்குகளுக்குச் சட்டத்தரணிகளை நியமிக்க முடியாமல் அல்லாடுகின்றார்.

முன்னாள் ஜனாதிபதிக்கு அரச சட்டத்தரணிகளை வழங்க இயலாது என்று சட்டமா அதிபர் கைவிரித்து விட்ட நிலையில், சட்டத்தரணிகளை தாமே நியமிக்க வேண்டிய கட்டாயத்தில், அதைச் செய்ய முடியாமல் - அதற்குக் கொட்டிக் கொடுக்க இயலாமல் - அவர் திண்டாடிக் கொண்டிருக்கின்றார் என்பது தெரிந்ததே.

அதே நிலைமை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கும் இப்போது வந்துவிட்டது.

சிறுவர்கள் உட்பட 8 அப்பாவித் தமிழ் மக்களை 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் திகதி வேறு சிலருடன் சேர்ந்து கொன்ற குற்றத்திற்காக கொழும்பு 'ட்ரயல் அட் பார்' நீதிமன்றத்தினால் இராணுவ சார்ஜண்ட் ஆர்.எம்.சுனில் ரட்நாயக்காவுக்கு 2015 ஜூன் 25ஆம் திகதி மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

பின்னர் 2017 மே 20 ஆம் திகதி அது தொடர்பான மேன்முறையீட்டை விசாரித்த ஐவர் கொண்ட உயர்நீதிமன்ற ஆயம் மரண தண்டனைத் தீர்ப்பை ஏகமானதாக உறுதி செய்திருந்தது.

அந்த மரண தண்டனைக் கைதிக்கு 2020 மார்ச் 26 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்திருந்தார்.

அதற்கு எதிராக - அந்த மன்னிப்பளித்த நடவடிக்கையை ஆட்சேபித்து - கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதிப் பதவியிலிருந்து இறங்கிய பின்னர், ஐந்து அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இவற்றில் மூன்று சார்பில் - மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து மற்றும் அம்பிகா சற்குணநாதன், கொலையுண்ட எட்டுப் பொது மக்களின் உறவினர்கள் ஆகியோரை மனுதாரர்களாகக் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுகள் சார்பில் - ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகி வாதாடி இருந்தார்.

கோட்டாபயவினால் பொது மன்னிப்பளிக்கப்பட்ட துமிந்த சில்வாவின் விடுதலைக்கு எதிராக சுமந்திரன் வாதாடிய இதே போன்ற வழக்கில் துமிந்த சில்வாவின் பொது மன்னிப்பு ரத்தான பின்புலத்திலேயே இந்த வழக்கிலும் சுமந்திரனின் வாதத்தை அடுத்து மனுவை விசாரணைக்கு உயர் நீதிமன்றம் ஏற்று இருந்தது.

மூன்று நீதியரசர்கள் கொண்ட உயர் நீதிமன்ற ஆயத்தின் முன்னால் நேற்று விசாரணை ஆரம்பமாக இருந்தது. ஆனால் வழக்கு நீதியரசர்கள் யஸந்த கோட்டாகொட, அச்சல வெங்கப்புலி ஆகிய இரண்டு நீதியரசர்களின் ஆயத்தின் முன்பே நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டதால் மூன்று நீதியரசர்கள் கொண்ட ஆயத்தின் முன் செப்டம்பர் 4ஆம் திகதி முதல் விசாரணைக்கு நேற்று திகதி நிர்ணயிக்கப்பட்டது.

நேற்று வழக்கு அழைக்கப்பட்ட போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவோ, அவர் பொது மன்னிப்பளித்து விடுவித்த சுனில் ரட்நாயக்காவோ அல்லது அவர்கள் இருவர் சார்பிலான சட்டத்தரணிகளோ மன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை.

ஆகையினால் இருவருக்கும் திரும்பவும் அழைப்பாணை அனுப்ப உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

ஜனாதிபதிப் பதவி காலத்தில் தாம் பண்ணிய விடயங்கள் தொடர்பான வழக்குகளுக்கு சட்டத்தரணிகளைத் தேடுவது மைத்திரிபால சிறிசேன போல கோட்டாபயவுக்கும் நெருக்கடியாகத்தான் இருக்கப் போகின்றது போலும்.

இப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூட தமது பதவி காலத்தின் முடிவில் எத்தனை வழக்குகளை எதிர்கொள்ளப் போகின்றாரோ தெரியவில்லை.

உள்ளூராட்சித் தேர்தலை குசும்புத்தனமான முறையில் ஒத்திவைத்த நடவடிக்கைக்காக அவர் நிச்சயம் நீதிமன்ற விசாரணையை எதிர் நோக்க வேண்டியிருக்கும், அதிலிருந்து அவர் தப்பவே முடியாது என்றே நினைக்கிறேன். 

you may also like