Sunday, October 4, 2026

சிறுவர் பாதுகாப்பில் அதிரடி மாற்றம் -அரச ஊழியர்களுக்கு புதிய கட்டாய சான்றிதழ்


அரச சேவையில் புதிதாக இணையும், குறிப்பாக சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புபடும் பணிகளில் ஈடுபடவுள்ள நபர்கள் சிறுவர் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் அல்ல என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளும் நடைமுறையை அறிமுகப்படுத்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, சிறுவர்களை அணுகக்கூடிய அல்லது அவர்களுடன் நேரடியாகப் பணியாற்றக்கூடிய அரச பதவிகளுக்கு ஆட்களை இணைத்துக்கொள்ளும்போது, குறித்த நபர்கள் சிறுவர் குற்றங்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றவாளிகள் அல்ல என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழைப் பெற்றுக்கொள்வது அவசியமாக்கப்படவுள்ளது.

இந்தச் சான்றிதழை பொலிஸார் அல்லது அதற்குப் பொறுப்பான உத்தியோகபூர்வ நிறுவனங்களின் ஊடாகப் பெற்றுக்கொள்ளும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரச ஊழியர்களுக்கும் நடைமுறை

இதேவேளை, ஏற்கனவே அரச சேவையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளும் குறித்த சான்றிதழை அவ்வப்போது புதுப்பித்து வழங்க வேண்டியிருக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, சேவைத் திறன் தடைகள் (Service Efficiency Bar) மற்றும் சம்பள உயர்வுகளைப் பெறும் சந்தர்ப்பங்களில், அந்தக் காலப்பகுதியில் தாம் சிறுவர் குற்றங்களுடன் தொடர்புபடாதவர்கள் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

சிறுவர்களுடன் பணியாற்றும் அரச ஊழியர்களின் பின்னணியை உறுதிப்படுத்துவது சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கியமான நடவடிக்கையாக அமையும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு நாடாக முன்னோக்கிச் செல்லும்போது சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இத்தகைய நடைமுறைகள் அவசியமானவை என்றும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.

you may also like