Sunday, October 4, 2026

இரகசியம் - பரகசியம் (13.5.2025)


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இப்போது அதிகாரம் ஏதும் இல்லாதவர். ஜனாதிபதிப் பதவியை இழந்த பின்னரும் நாடாளுமன்ற உறுப்பினராகவும், நிதியமைச்சராகவும், பிரதமராகவும் பதவி வகித்தவர். இப்போது அரசியலில் பெரும்பாலும் ஓய்வு நிலையில்தான் அவர் இருக்கிறார். ஆயினும் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேல் ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் அவரோடு ஊடாட்டத்தை - தொடர்பாடலை - நட்பு நிலையை - இன்று வரை நான் பேணி வருகிறேன்.

அவர் அதிகாரத்தில் இருந்த சமயத்தில் அவரது அலரி மாளிகை இல்லத்திலேயே பல சந்திப்புக்களின் போது அவருடன் முரண்பட்டு, வாதித்து, விவாதித்து, மோதியிருக்கிறேன். பல பேருக்கு முன்னால் - குறிப்பாக பிற பத்திரிகையாளர்களுக்கு முன்னால் - அவர் முகம் சிவக்க, கடும் கோபத்தில், என்னைத் திட்டிப் பேசிச் சத்தமிட்ட சம்பவங்களும் உண்டு. என் பத்திரிகையின் நிலைப்பாடும், என் எழுத்தும், அந்தச் சமயங்களில் அவரைச் சீண்டி அவ்வாறு சினக்கப் பண்ணி இருக்கும் என்பது நிச்சயம். அதுவும் பாதுகாப்பு விவகாரங்களில் அவரது வலதுகரமாக அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்‌ஷ இருந்த காலத்தில் இயல்பாகவே என் மீது அவருக்கு சீற்றமும் இருப்பது புரிந்துகொள்ள தக்கதுதான்.

அப்படியான ஒரு வாத விவாதத்தின் போது - அவர் மிகக் கோபமாக என் மீது பாய்ந்து விழாத குறையாக சத்தமிட்ட போது - நான் அவருக்கு சொன்ன ஒரு விடயத்தை, இப்போது இந்த நாட்டின் அரசுத் தலைவருக்கு ஒரு தடவை யாராவது குறிப்பிட்டுச் சொல்வது பொருத்தமானது என்று நினைக்கிறேன்.

அந்தச் சம்பவம், என் ஞாபகம் சரி என்றால் 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் நடுப் பகுதியில் ஒரு நாள் காலையில் அலரி மாளிகையில் நடந்தது. விடுதலைப் புலிகளுக்கும் மஹிந்த அரசுக்கும் இடையில் ஜெனிவா - 1 சமாதானப் பேச்சுக்கும், ஜெனிவா - 2 பேச்சுக்கும் இடையில் ஒரு பெரும் தாக்குதலை விடுதலைப் புலிகள் வன்னியில் பல முனைகளில் அதிரடியாக ஆரம்பித்தமையை அடுத்து 'ஏ-9' பாதை அரசினால் போக்குவரத்துக்கு மூடப்பட்டது.

அந்தச் சமயத்தில் பத்திரிகை ஆசிரியர்களை காலை உணவோடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ சந்தித்தார். அதற்கு இரண்டொரு தினங்களுக்கு முன்னர்தான் செஞ்சோலை விமானக் குண்டுவீச்சுப் படுபாதகம் அரங்கேறியிருந்தது. என் மனதை ரொம்பவும் அந்த விடயம் அரித்துக் கொண்டிருந்தது.

பொதுவாக பத்திரிகையாளர்களுடனான கலந்துரையாடல் முடிந்த பின்னர் அவரது இல்லத்தில் தட்டுகளில் பரிமாறப்பட்ட உணவை கைகளில் வைத்துக்கொண்டு நாங்கள் நின்றபடி உரையாடிய போது இந்தச் சம்பவம் நடந்தது.

வேறு ஏதோ ஒரு விடயத்தை ஒட்டி என் மீது சீறிக் கொண்டிருந்தார் ஜனாதிபதி மஹிந்தர்.

'You people are praising low of Jungle' என்று தொடங்கி புலிகளை ஆதரிக்கும் காட்டுமிரண்டித்தனத்தை நீங்கள் செய்கின்றீர்கள் என்ற மாதிரி என்னைப் பார்த்து தயவு தாட்சணயமின்றி அவர் சீறி விழுந்து கொண்டிருந்தார். அவரது கோபத்தையும், கடும் சொற்களையும் பார்த்தும் கேட்டும் அதிர்ந்து போயிருந்தனர் மற்றப் பத்திரிகையாளர்கள். அவர்கள் இதனை எதிர்பார்க்கவில்லைப் போலும். காலை விருந்துக்கு அழைத்து இப்படி ஒரு பத்திரிகையாளரை அவர் வசை பாடுவார் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்க மாடார்கள்தான்.

ஆனால் அந்த சந்திப்புக்குப் போகும்போது இப்படியாகும் என்று நான் எதிர்பார்த்திருந்தேன். அதற்கு முன்னர் புலிகளுக்கும் ஜ்னாதிபதி மஹிந்தருக்கும் இடையில் சமரச முயற்சிகளில், வெளியே தெரியாத தூதுவனாக நான் பங்குபற்றிருந்தமையால, புலிகள் இப்போது அரசு படைகள் மீது திடீரெனத் தாக்குதல் தொடங்க அது தொடர்பிலான ஜனாதிபதியின் சீற்றம் என் மீதுதான் முதலில் திரும்பும் என்பதை நான் எதிர்பார்த்திருந்தேன். அவரது சீற்றத்திற்கு நான் அடங்கிவிடவில்லை. நானும் பதிலுக்கு வாயாடினேன். என் பக்கத்தில் உணவுத் தட்டுடன் நின்ற் இன்னொரு தமிழ் பத்திரிகையின் ஆசிரியர் மற்றவர்களுக்கு தெரியாமல் என் சேர்ட்டைப் பிடித்து அடிக்கடி இழுத்துக் கொண்டு இருந்தார். திருப்பி கதைத்து, வாயடிக்க வேண்டாம் என்பது அவரது சுரண்டலின் செய்தி. நான் அதைப் பொருட்படுத்தாமல் என்னளவில் - முடிந்தளவில் - ஜனாதிபதியின் சீற்றத்திற்கு பதிலை சற்றுக் காட்டமாகக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.

சில தினங்களுக்கு முன்னர் நடந்த செஞ்சோலை சிறார்கள் மீதான குண்டு வீச்சு என் மனதை அரித்துக் கொண்டிருந்தமையால், மற்ற பத்திரிகையாளர்களுக்கு முன்னால் நான் அந்த விடயத்தை நோக்கி வாதத்தைத் திருப்பினேன்.

அப்பாவிச் சிறார்களை படுபாதகமாகக் கொன்று விட்டீர்களே என்ற சாரப்பட நான் மென்மையான குரலில், ஆனால் காட்டமான குற்றச்சாட்டை அவரை நோக்கி வைத்தேன்.

அவர் சீற்றத்துடன் பாய்ந்து பதிலளித்தார்.

''இல்லை, இல்லை... அது புலிகளின் பயிற்சிப் பாசறை. புலிகள் இராணுவப் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த இடம் மீதுதான் தாக்குதல் நடத்தப்பட்டது'' என்று சாரப்பட அவர் உறுதியாகப் பதில் கூறினார்.

''இல்லை நான் அந்த வன்னிபுனம் பகுதிக்கு முன்னர் போய் இருக்கிறேன். குண்டு வீச்சு நடந்ததும் என் செய்தியாளர் அங்கு நேரில் சென்று இருக்கிறார். அது பாடசாலை பிள்ளைகளுக்கு சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் முதலுதவிப் பயிற்சிகள் வழங்கப்படுகின்ற இடம். சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த பாடசாலை சிறார்கள் மீதுதான் உங்கள் விமானப்படை குண்டு வீசி இருக்கின்றது'' என்று திடமாக, உறுதியாக, அணித்தரமாக, ஆனால் மென்மையாக நான் கூறினேன்.

அது, அவருக்கு இன்னும் சீற்றம் தந்திருக்கும் போல.

முகம் சிவக்க எண்ணிப் பார்த்தபடி ''உங்கள் ஆள்கள்தான் (தமிழர்கள்தான்) அந்த தகவலை தந்தார்கள். அது தப்பில்லை'' - என்றார் அவர்.

''அதுதான் கூறுகிறேன் யுவர் எக்ஸலன்ஸி, உங்களை சிலர் தவறாக வழி நடத்துகிறார்கள். அதற்கு எடுபட்டு நீங்களும் பிழையான வேலைகளைச் செய்கிறீர்கள்''(....that is why I am telling you your excellency that some people are misdirecting you) என்றேன் நான்.

ஒரு கணம் அவர் பொறி கலங்கி, ஸ்தம்பித்து நின்றமையை நான் பார்த்தேன். ஆனால் அவர் தன்னை சுதாகரித்துக் கொண்டார். தொடர்ந்து என் மீது வசை பாடினார்.

''நான் சந்திரிகா அல்லன். பொறுத்திருந்து பாருங்கள் எப்படி உங்கள் எல்லோருடைய வாலையும் ஒட்ட நறுக்குகிறேன்'' என்ற மாதிரி அவருடைய சீற்றப் பேச்சு அமைந்தது.

இந்த வாதாட்டம் பற்றிய விவகாரம், என்னை மிரட்டும் பாணியில் அவர் அந்த உரையாடலில் பேசிய விடயங்கள் பின் ஆசிய மனித உரிமைகள் அமைப்பின் இலங்கை பற்றிய அறிக்கையில் வார்த்தைக்கு வார்த்தை வெளியாகி இருந்தன. தமிழ்ப் பத்திரிகை ஆசிரியரை காலை உணவுக்கு அழைத்து மிரட்டிய நாட்டின் ஜனாதிபதி என்று சாரப்பட அதன் அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

அதுவல்ல விடயம். நான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு 19 ஆண்டுகளுக்கு முன்னர் சொன்ன அந்தக் கருத்தை இப்போது இந்த நாட்டின் ஜனாதிபதிக்கு நேரில் சொல்ல யாரேனும் இருக்கின்றார்களா என்று எண்ணிப் பார்க்கிறேன்.

''ஜனாதிபதி அவர்களே! உங்களை சிலர் தமிழர் தாயகத்தில் இருந்து பிழையாக வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்கள் மனதை வெல்ல உங்களுக்கு கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தை இடையில் வந்த சில முட்டாள் பிரகிருதிகள் உங்களைத் தவறாக வழி நடத்தி, இந்த வாய்ப்பை போட்டடித்துக் குழப்புகிறார்கள். தங்களின் அறிவிலிதனத்தால் - பிழையான அணுகுமுறையால் - தமிழர்களின் ஆதரவை ஜனாதிபதி அடியோடு இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருப்பதை, மூடி மறைத்து, வேறு கதைகளை உங்களுக்குப் புனைந்து கொண்டிருக்கின்றார்கள். வன்னியில் தமிழரசுக் கட்சியின் வெற்றிக்கு கசிப்பு விநியோகமும், பண்ம் பட்டுவாடாவும் காரணம் என்ற விடயம் கூட இவ்வாறு பிழையாக வழிநடத்துவோரின் அபத்தக் குற்றச்சாட்டுகள்தான். இவ்வாறு தவறாக உங்களை - உங்கள் அரசை - வழிநடத்தும் பிரகிருதிகளை நீங்கள் தொடர்ந்தும் பொறுப்புக்களிலும் பதவிகளிலும் விட்டு வைத்திருந்தால், அவர்களின் வழிநடத்தலில் நீங்கள் தமிழரின் ஆதரவை அடியோடு இழப்பது தவிர்க்க முடியாததாக இருக்கும்.'' - இப்படி ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்கவுக்கு யார் சொல்லப் போகின்றார்? தெரியவில்லை.!

அப்படியான உண்மைகளை நேரில் தமக்குத் தெரிவிக்க கூடிய நடுநிலையாளர்களை ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க பக்கத்தில் வைத்திருப்பார் என்று கூடத் தெரியவில்லை….!

you may also like