Thursday, October 8, 2026

இரகசியம் - பரகசியம் (11.04.2024)


கோட்டாபய ராஜபக்‌ஷ பதவியை விட்டு ஓடியமையை அடுத்து புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கு நாடாளுமன்றத்தில் நடந்த தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுடன் போட்டியிட்டவர் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும.

முன்னாள் ஜனாதிபதிகள் குறித்து அவர் ஒரு கருத்துத் தெரிவித்திருக்கின்றார்.

தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ள நான்கு முன்னாள் ஜனாதிபதிகளும் தமது சொந்த நலனுக்காகவும், மக்களுக்காகவும் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டுமென டலஸ் அழகப்பெரும கோரியிருக்கின்றார்.

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்‌ஷ, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்‌ஷஆகியோர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டுமென அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

"அரசியலில் இருந்து விலகி இருப்பது அவர்களின் சொந்த ஆரோக்கியத்திற்கும், மக்களின் நலனுக்கும் நல்லது. முன்னாள் ஜனாதிபதிகள் என்ற முறையில் அவர்களுக்காக செலவிடப்படும் பொது நிதியை தமது எந்த அரசியல் விஷயத்திற்கும் சாதகமாக அவர்கள் பயன்படுத்தக்கூடாது" என்று அவர் குறிப்பிட்டார்.

ஓரளவுக்கு நியாயமான கோரிக்கைதான். ஆனால் அரசியலில் ஊறிய இரத்தம் சும்மா இருக்க விடாதே....!

****

இலங்கையின் சில பகுதிகளில் வெப்பநிலை மோசமாக அதிகரித்து வருவதாகக் கூறப்படுகின்றது.

குறிப்பாக வடக்கு, மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் அனுராதபுரம், காலி, மாத்தறை மாவட்டங்களில் வெப்பச் சுட்டெண் வரவிருக்கும் நாள்களில் எகிறும் என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

அதனால் இப்பிரதேசங்களில் மக்கள் தாங்க முடியாத வெப்பத்தால் - சூட்டால் - அந்தரிக்கும் நிலைமை ஏற்படும் என்றும் எதிர்வு கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அநுராதபுரம், புத்தளம், குருநாகல், கம்பஹா, கேகாலை, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை ஆகிய 15 மாவட்டங்களில் மாத்திரமே இந்த அனல் நிலைமை நிலவுமாம்.

இந்த அனல் பறக்கும் சூடு உடல்நல அபாயங்களை சாத்தியமாக்கும் என எச்சரிக்கப்படுகின்றது.

குறிப்பாக வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் முன்பே சுகாதாரப் பிரச்சினைகள் உள்ள தனிநபர்கள் போன்றோர் அதிகம் பாதிக்கப்படக் கூடும்.

இப்படி அளவுக்கு மீறிய வெப்பம், குழப்ப மனநிலையில் இருப்போரை விரைவில் - இலகுவாக - மேலும் குழப்பி விடும் எனவும் கூறப்படுகின்றது.

ஆகையால், வெயில் கிளப்பும் சூடு குறித்தும் கவனமாக இருங்கள். அந்தச் சூட்டினால் குழம்பி வருபவர்கள் குறித்தும் இக்கால கட்டத்தில் உஷாராக இருங்கள்....!

you may also like