- by Editor
- 3 weeks ago
இரகசியம் - பரகசியம் (10.02.2026)
-
- by Editor,
- 8 months ago
- in இரகசியம் பரகசியம்
ஆளுநர்கள் என்றாலே அரசாங்கத்தின் கைப் பொம்மைகள்தான் -ஜனாதிபதியின் ஏவலர்கள்தான் - என்பது நமக்கு தெரிந்ததே. இந்த 'ஏவலர்கள்' சில சமயங்களில் 'ஏவல் நாய்கள்' ஆகி விடுவதும் உண்டு.
அடங்கிப் போகும் சேவகர்களைத்தான் எஜமான ஜனாதிபதி எப்போதும் விரும்புவார். ஆகையினால் தனித்துவமும் தற்றுணிவும் கொண்டவர்கள் பெரும்பாலும் இப்பதவியைப் பொறுப்பேற்பதில்லை. பொறுப்பேற்றாலும் அதில் நின்று பிடிப்பதில்லை.
ஆயினும், யாழ் மாவட்ட அரசு அதிபராக துணிச்சலுடனும் தனித்துவத்துடனும் நிர்வாகத் திறமையுடனும் மடங்காமலும் கடமையாற்றிய ஒருவர் வடக்கு மாகாண ஆளுநராக வந்த போது அந்தத் தனித்துவம் அவரின் மாகாண நிர்வாகத்திலும் மிளிரும் என்றுதான் எதிர்பார்த்தோம். ஆனால் அவையெல்லாம் இப்போது காணாமல் போய் கானல் நீராகிவிட்டன. கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலைமையாகி விட்டது.
மாகாண சபை தேர்தல்களை நடத்தாமல் அதிகார வர்க்கம் இழுத்தடிப்பது தங்களின் கட்டுப்பாட்டில் - தங்கள் விருப்பப்படி - மாகாண நிர்வாகங்களை நடத்த வேண்டும் என்பதற்குத்தான். அந்த வேலையைச் செய்வதற்கான ஏவலர்களாக ஆளுநர்கள் மாறிவிட்டார்கள். அதிலும் வடக்கு ஆளுநரின் நிலைமையோ சொல்லத் தேவையில்லை.
'எப்படி இருந்த மனிதர் இப்படி ஆகிவிட்டாரே...!' என்று வேதனைப்படுவதைத் தவிர நமக்கு வேறு வழி இல்லை.
வடக்கு மாகாண நிர்வாகம் என்பது ஆளும் கட்சித் தரப்பின் விருப்பத்துக்கு வளைந்து கொடுக்கும் ஆளுநரின் செயற்பாடு என்றாகிவிட்டது.
மாகாண ஆளுநரின் நேரடி நியமனத்தின் கீழ் உள்ள ஐந்து பதவிகளில் மூன்று பதவிகளில் அமர்ந்தவர்கள் தற்போதைய ஆளுநரால் நியமிக்கப்பட்டவர்களே. பின்னர் அவர்கள் பதவி நீக்கப்பட்டு புதியவர்கள் இப்போது நியமிக்கப்பட்டு விட்டனர்.
இந்தப் பதவி நீக்கத்துக்கு அவர் (ஆளுநர்) பக்கத்தில் இருந்து கூறப்படும் காரணம் 'அவை மாற்றச் சொல்லி நிற்கினம்...' என்பது மட்டும்தான்.
இவற்றைத் தாண்டி மாகாண சபையின் நிர்வாகத்தை அப்படியே மத்திய அரசின் அரசியல்வாதிகளுக்கு தாரை வார்த்துக் கொடுக்கும் வேலையை தற்போதைய ஆளுநர் முன்னின்று செய்கிறார் என அதிகாரிகள் மட்டத்தில் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
வடக்கு மாகாண சபையின் கீழ் உள்ள 5 அமைச்சுக்களிற்கும் வடக்கில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் ஆளுநரால் உத்தியோகப்பற்றற்ற வழிநடத்துநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆளுநரின் செயலாளர் ஒப்பமிட்டு இந்த ஐந்து எம்.பிக்களுக்கும் வழங்கப்பட்டுள்ள கடிதத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான திட்ட ஆராய்வு கூட்டங்களில் அந்த எம்.பிக்கள் பங்குகொள்ளலாம் என்று மட்டும்தான் கூறப்பட்டுள்ளது.
ஆனால் உண்மையில் மாகாண சபையின் கீழ் இருக்கும் ஐந்து அமைச்சுக்களும் ஆளும் தரப்பின் இந்த ஐந்து எம்.பிக்களுக்கு பங்கிட்டு வழங்கப்பட்டுள்ளன என்பதுதான் நிலைமை. ஏற்கனவே அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுகளில் தத்தமது கைவரிசைகளைக் காட்டத் தொடங்கி விட்டனர் என்பது அதிகாரிகள் மட்டத்திலிருந்து முணுமுணுப்பாக கசியத் தொடங்கி விட்டது.
இந்த நியமனத்திற்கு அமைய உள்ளூராட்சி அமைச்சிற்கு - இளங்குமரன். சுகாதாரம் - மருத்துவர் சிறிபவானந்தராஜாவுக்கு. சிறுவர்,மகளிர் விவகாரம் - ஜெயச்சந்திரமூர்த்திக்கு.
இதேபோன்று கல்வி அமச்சிற்கு ஜெகதீஸ்வரன். விவசாய அமைச்சிற்கு திலகநாதன்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை இல்லாதமை காரணமாக மாகாண நிர்வாகம் ஜனாதிபதியின் பிரதிநிதியான ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றது. இதுதான் தற்போதைய சட்டரீதியான நிலைமை.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண முதலமைச்சர் உட்பட மாகாணங்களில் ஐந்து அமைச்சர்களும் ஆற்ற வேண்டிய பணியை இப்போது ஆளுநர் தமது கண்காணிப்பில் முன்னெடுக்க வேண்டும்.
அதை அவர் செய்யாமல், வடக்கு மாகணத்தில் இருந்து நாடாளுமன்றுக்கு ஆளும் தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவு செய்யப்பட்ட ஐந்து எம்பிக்களுக்கு பகிர்ந்து அளித்திருக்கிறார் அவர். அதுவும் சட்ட ரீதியாக அல்ல, மாறாக திட்ட ஆராய்வுக் கூட்டங்களில் அந்த எம்பிக்கள் பங்குபற்றுவார்கள் என்ற மறைபொருளில்.
ஆனால், உண்மையில் ஐந்து மாகாண சபை அமைச்சுக்களையும் கையாளும் அமைச்சர்கள் போல இந்த ஐவரும் செயல்படுவதற்கான அதிகாரம் எழுத்திலும் இல்லாமல், சட்ட ரீதியாகவும் இல்லாமல், இந்த ஐவரிடமும் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது.
அந்த நிலைமைக்கு ஆளும் தரப்பின் அழுத்தத்திற்கு விலை போய் இருக்கின்றார் வடக்கு ஆளுநர்.
நாடாளுமன்றின் ஐந்து எம்.பிக்களை வடக்கு மாகாண அமைச்சர்கள் போல செயல்படுவதற்கு இடம் அளித்து மாகாண சபை முறைமையையும் கொச்சைப்படுத்தி, ஒரு சிறந்த நிர்வாகி எனத் தமக்குக் கடந்த காலத்தில் இருந்த நற்பெயரையும் சின்னாபின்னமாக்கியிருக்கின்றார் வடக்கு ஆளுநர்.
அந்த ஆளும் தரப்பின் ஐந்து எம்.பிக்களுக்கும் ஆளுநர் மூலம் வழங்கப்பட்ட இந்த நியமனம் எத்தனை கூட்டத்திற்கு என்றோ அல்லது எவ்வளவு காலத்திற்கு என்றோ எழுதப்படவில்லை.
இந்த நடவடிக்கை மூலம் ஐந்து மாகாண அமைச்சுக்களும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவருக்குத் தாரை வார்க்கப்படுவதாகவே காணப்படுவதனால் இனியும் வடக்கு மாகாண சபையில் பணியாற்றுவது அடிமைக்கு ஒப்பானது என அதிகாரிகள் புலம்புகின்றனர்.
இலங்கையின ஏனைய மாகாணத்தில் இல்லாத இந்த ஒரு நடைமுறையை தற்போது வடக்கு ஆளுநர் புகுத்தியுள்ளமை ஏனைய மாகாணத்திற்கும் இந்த நோய் பரவுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.