Friday, October 9, 2026

பிள்ளையான் விளக்கமறியல் ஜூலை 13 வரை நீட்டிப்பு


கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான விசாரணையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது, குறித்த உத்தரவை நீதவான் பிறப்பித்தார்.

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் T-56 ரக துப்பாக்கிகளால் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக, சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட இரு சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கடந்த 15 ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, சிவநேசத்துரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த ஐந்து கொலைச் சம்பவங்களிலும் மூன்றாவது சந்தேகநபராக சிவநேசத்துரை சந்திரகாந்தன் பெயரிடப்பட்டுள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் படுகொலை வழக்குடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

you may also like