Sunday, October 11, 2026

இரகசியம் - பரகசியம் (10.02.2024)


தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பில் சர்ச்சைகளில் சிக்கி, கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் இருக்கின்றமையோடு அமைச்சர் பதவியையும் இழந்துள்ள கெஹலிய ரம்புக்வெல விவகாரம் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அதிர்வுகளை ஏற்படுத்தி வருகின்றது.

ஏற்கனவே கடந்த ஆண்டு இறுதியில் அவர் சுகாதார அமைச்சராக இருந்தபோது அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை அரசு தரப்பினால் முறியடிக்கப்பட்டது. கெஹலியவுக்கு ஆதரவாக அரசு தரப்பில் 113 எம்.பிக்கள் வாக்களித்து இருந்தனர்.

இப்போது கெஹலிய கைது செய்யப்பட்ட போது அவர் சுற்றாடல் துறை அமைச்சராக இருந்தார். அவரின் கைதை ஒட்டி அவருக்கு எதிராக மீண்டும் ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றம் இவ்வாரம் மீண்டும் புதிய கூட்டத்தொடரை ஆரம்பித்ததும் கொண்டு வருவதற்கு எதிரணிகள் தீர்மானித்து, மும்முரமாகக் காரியமாற்றத் தொடங்கின.

ஆனால், அப்படி ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றுக்கு வந்து, அது விவாதத்துக்கு எடுக்கப்பட்டால், அரசுக்கு அது பெரும் அசௌகரியத்தையும் அரசியல் பின்னடைவையும் தரும் என்று ஜனாதிபதிக்கு ஆலோசனை கூறப்பட்டதாம். அதை அடுத்து அமைச்சர் பதவியை விட்டு விலகும் ராஜினாமாக் கடிதத்தை விளக்க மறியலில் இருந்தபடியே உடனடியாக அனுப்பி வைக்கும்படியான பணிப்புரை கெஹலியவுக்கு பறந்ததாக விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.

இப்போது கடந்த ஆண்டு இறுதியில் கெஹலியவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டு தோற்கடிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஒட்டி சமூக செயற்பாட்டாளரான சஜய மகவத்த என்பவர் ஒரு நடவடிக்கை எடுத்திருக்கின்றார்.

தவறிழைத்த கெஹலியவைக் காப்பாற்றும் விதத்தில் அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்த்து வாக்களித்தனர் என்று மூன்று மருத்துவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்களுக்கு எதிராக அது தொடர்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோரி, இலங்கை மருத்துவ கவுன்ஸிலிடம் அவர் முறைப்பாடு செய்திருக்கின்றார்.

இப்போதைய சுகாதார அமைச்சர் டாக்டர் ரமேஷ் பத்திரன, டாக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, டாக்டர் சீதா அரம்பேபொல ஆகிய மூவருக்கு எதிராகவே இந்த முறைப்பாடு செய்யப்படுகின்றது.

மூவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றாலும், மருத்துவர்கள் என்ற முறையில் அது தொடர்பான கடப்பாடுகள், பொறுப்புகள், ஒழுங்கு முறைகளை அவர்கள் துறக்க முடியாது என்று கூறப்படுகின்றது.

***

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்குள் அதன் தலைவர் சஜித் பிரேமதாஸாவுக்கு எதிராக முரண்டு பிடித்து நிற்கும் சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா போன்ற தரப்பினரை ஓரங்கட்டி விட்டு, தனது அரசியல் பயணத்தை முழு அதிகாரத்தோடு முன்னெடுக்கத் தயாராகிவிட்டார் சஜித் பிரேமதாஸா என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு கடந்த 7 ஆம் திகதி ஆரம்பமாகி உள்ளது. புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாவதால் நாடாளுமன்ற மேற்பார்வை குழுக்களும் புதிதாக நியமிக்கப்பட வேண்டும்.

எந்த நிலையியல் குழுவுக்கும் சம்பிக்க ரணவக்கவின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தி இம்முறை கொடுக்கவில்லை. அதனால் எந்தக் குழுவிலும் அவருக்கு இடமில்லை.

ஐக்கிய மக்கள் சக்திக்கு நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா போன்றோருக்கு நேரம் வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிகின்றது.

தனது தலைமைத்துவ அதிகாரக் கைவரிசையை சஜித் காட்டத் தொடங்கி விட்டார் என்று கட்சி வட்டாரங்கள் திருப்தி தெரிவிக்கின்றன.

you may also like