Sunday, October 4, 2026

இரகசியம் - பரகசியம் (04.11.2025)


2024 ஆம் ஆண்டின் மக்கள் தொகை மற்றும் வீட்டு வசதிக் கணக்கெடுப்பு சில ஆச்சரியமான தரவுகளை தந்து இருப்பதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.

வடக்கு, கிழக்கைப் பூர்வீகமாகக் கொண்ட இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை பெரு வீழ்ச்சி கண்டிருக்கும் என்பது குறித்து நாங்கள் எல்லோரும் கவலையுடன் பேசிக் கொண்டிருக்க, புள்ளி விவரங்கள் வேறுவிதமான தகவல்களைத் தந்து நிற்கின்றன.

2012 இல் 8 லட்சத்து 39 ஆயிரத்து 504 ஆக இருந்த மலையகத் தமிழர்களின் எண்ணிக்கை 2024 இல் 6 லட்சத்து 360 ஆக வீழ்ச்சி அடைந்திருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.

அதாவது 2012 இல் மொத்த ஜனத்தொகையில் 4.2 வீதமாக இருந்த மலையக மக்களின் தொகை 2024இல் 2.8 வீதமாகக் குறைந்துவிட்டது.

ஆனால் இலங்கை தமிழர்களின் ஜனத்தொகை எண்ணிக்கை 2012 இல் 11.2 வீதமாக இருந்தது. அது 2024 இல் 12.3 வீதமாக உயர்ந்துள்ளது.

யுத்தத்தின் பின்னர் இலங்கைத் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் நாட்டை விட்டு வெளியேறி வரும் சூழலில், இது எப்படி சாத்தியமாயிற்று என்று பலரும் கேள்வி எழுப்பக்கூடும்.

மழையகத் தமிழர்கள் பலர் மலையகம், வடக்கு, கிழக்கு என்று பிரிக்காமல் தங்களை 'இலங்கைத் தமிழர்கள்' என்று பதிவு செய்தமையால் மலையகத் தமிழர்களின் வீதம் குறைந்து, இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கக் கூடும் என்று சில தரப்புகள் குறிப்பிடுகின்றன.

சிங்களவர்களின் எண்ணிக்கையும் 2012 இல் 74.9 வீதமாகக் இருந்து 2024 இல் 74.1 வீதமாக விழுந்துள்ளது

முஸ்லிம்கள் மற்றும் மூர் இனத்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 2012 இல் 9.2 வீதமாகக் இருந்து 2024 இல் 10.5 வீதமாக உயர்ந்துள்ளது.

நாட்டின் ஓட்டு மொத்த மக்கள்தொகையின் வளர்ச்சி வீதத்தை விட, முஸ்லிம்களின் வளர்ச்சி வீதம் மட்டும் மூன்று மடங்கு அதிகம் என்று இந்தப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் 25 மாவட்டங்களிலும் முஸ்லிம்கள் அல்லது மூர் இனத்தவர்களின் எண்ணிக்கை வீதம் உயர்ந்துள்ளது. மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தவரை 2012 இல் 16.5 வீதமாக இருந்த அவர்களின் எண்ணிக்கை 2024 இல் 26.5 வீதமாக அதிகரித்துள்ளது.

இந்த புள்ளி விவர மாற்றங்கள் உட்கிடையாக பல அரசியல் செய்திகளை நமக்குச் சொல்லுகின்றன என்பதை நாங்கள் மறந்து விடக்கூடாது.

***

போதைப் பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான தேசிய வேலை திட்டத்தை கடந்த வியாழக்கிழமை கொழும்பில் சுகததாஸ உள்ளரங்கில் ஓர் உயர்மட்ட நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கா ஆரம்பித்து வைத்தார்.

அங்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி, தமது பேச்சில் போதைப் பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பில் முழு ஆதரவையும் வழங்குமாறு ஊடகங்களைப் பகிரங்கமாகக் கேட்டுக் கொண்டார்.

ஆனால், இதில் வேடிக்கை என்னவென்றால், அந்தத் தேசிய திட்டம் தொடர்பான நிகழ்வு குறித்து செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களுக்கும் படப்பிடிப்பாளர்களுக்கும் அங்கு இடமோ அனுமதியோ அளிக்கப்படவே இல்லை என்பதுதான்.

இந்த நிகழ்வில் பார்வையாளராகப் பங்குபற்றுவதற்கு பத்திரிகைகளின் ஆசிரியர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் செய்தியாளர்களுக்கோ படப் பிடிப்பாளர்களுக்கோ அங்கு இடம் அளிக்கப்படவே இல்லை. செய்தியாளர்களையும் படப்பிடிப்பாளர்களையும் புறமொதுக்கிக் கொண்டு இந்தத் திட்டத்திற்கு எவ்வாறு ஊடகங்களின் ஆதரவை ஜனாதிபதி பெறப்போகின்றார் என்பது புரியவில்லை.

இத்தகைய பொறுப்பற்ற போக்கு, இந்த நிகழ்வுக்கு மாத்திரமானது என்பது அல்ல. பொதுவாகவே அரசின் பல நிகழ்வுகளில் இத்தகைய 'கோணங்கித்தனம்' தொடர்ந்து அரங்கேறுவது சகஜமாக உள்ளது. கொழும்பில் என்று மாத்திரமல்ல, வடக்கில் யாழ்ப்பாணத்தில் கூட அதிகார வர்க்கம் அப்படித்தான் நடந்து கொள்கின்றது. ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று கருதப்படும் ஊடகங்களைத் துச்சமாக மதித்துப் புறமொதுக்கும் அதிகாரத்தனம் இருக்கும் வரை ஊடகங்களின் ஒத்துழைப்பை பெற்று, இலக்கை அடைவது என்பது பொதுவாக சாத்தியப்படக்கூடியது அல்ல. அதிகார வர்க்கம் தன்னைத் திருத்திக் கொள்வது நல்லது. 

you may also like