- by Editor
- 2 years ago
இரகசியம் - பரகசியம் (08.11.2023)
-
- by Editor,
- 2 years ago
- in இரகசியம் பரகசியம்
'யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்' என்பார்கள். அதுபோல சீனிக்கு வரி விதித்தாலும் ஊழல்; வரி விலக்கினாலும் ஊழல் என்றாகிவிட்டது இலங்கை நிலைமை. கோட்டாபய காலத்தில் சீனி ஊழல் ஒருவிதத்தில் என்றால், அதற்கு மறுவளத்தில் ரணில் காலத்தில் அதே ஊழல்.
கோட்டாபய காலத்தில் சில வர்த்தகர்களின் சீனிக் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு வந்து தரித்த போது, சீனிக்கான வரி திடீரென்று ஐம்பது ரூபா குறைத்து அதிரடியாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி ஆக 25 சதம் மட்டுமே ஒரு கிலோ சீனிக்கான வரியாக அமைந்தது.
ஆனால் வரி விலக்கப்பட்டமையை அடுத்து சந்தையில் சீனியின் விலையை அதற்கேற்ப குறைக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவே இல்லை. எனவே, கப்பலில் சீனியைக் கொண்டு வந்து இறக்கியவர்கள் அந்த வரியை அரசுக்கு செலுத்தாமலேயே, பழைய விலைக்கே சீனியை விற்றனர். கிலோவுக்கு ரூ.50 மேல் அதிகமாக சுளையாகச் சுருட்டினர். இந்த ஊழலில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 1,600 கோடி ரூபா எனக் கணக்கிடப்பட்டது.
இப்போது சீனிக்கு கிலோவுக்கு 25 சதமாக இருந்த வரியை திடீரென 50 ரூபாவால் கூட்டி அறிவிப்பு வெளியிடப்பட்டது. உடனே சந்தையில் சீனியின் விலை அதற்கு ஏற்ப கூட்டப்பட்டது.
என்னவென்று தேடிப் பார்த்தால், அதே வர்த்தகர்கள் சிலர் 22 ஆயிரம் மெட்ரிக் தொன் சீனியை கிலோவுக்கு வெறும் 25 சதம் வரியுடன் இறக்கி, சுங்கத்தை பொருள்கள் தாண்டிய கையோடு, ஐம்பது ரூபா வரி விதிக்கப்பட்டிருக்கின்றது.
இனி என்ன? 50 ரூபாய் வரி செலுத்தாத 22 ஆயிரம் மெட்ரிக் தொன் சீனியையும் இப்போதைய - கூடிய - புதிய - விலைக்கு விற்று, அந்த வர்த்தகர்கள் ஆயிரம் கோடி ரூபா மேலதிகமாகச் சுருட்டிக் கொள்வர். அது அரசுக்கு வரி இழப்பாகும்.
கடந்த மாதத்திற்கு முந்திய மாதம் வரை மாதம் சராசரி ஆயிரம் தொன் சீனி இறக்கிக் கொண்டிருந்த வர்த்தகர் ஒருவர், கடந்த மாத இறுதியில் 8 ஆயிரத்து 600 தொன் சீனியைத் தருவித்து, கப்பலில் இருந்து இறக்கி, துறைமுகத்திலிருந்து சீனி லொறிகள் 'கிளியரான' கையோடு, ஐம்பது ரூபா வரி விதிப்பு அறிவிப்பு வந்திருக்கின்றது.
சீனிக்கு விசேட பாவனைப் பொருள் வரி விதிக்கப்பட இருப்பது பற்றிய தகவல் அமைச்சரவைக்கு தெரியப்படுத்தப்பட முன்னரே சில வர்த்தகர்களுக்குத் தெரிந்திருந்தமை எங்ஙனம் என்று தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு பணியாளர் விவகார அமைச்சர் மனுஷ நாணயக்கார கேள்வி எழுப்பினார்.
இவ்விடயம் குறித்து நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குகள் குழுவில் கேள்வி எழுப்பப்படும் என அக்குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா எம்.பி. கூறியிருக்கிறார். 50 ரூபா வரி அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்னர் - வழமைக்கு மாறாக - சீனியைப் பெருந்தொகையில் இறக்குமதி செய்து துறைமுகத்தை விட்டு களஞ்சியசாலைகளுக்கு வெளியேற்றிய பிரகிருதிகளின் முழு விவரங்களையும் ஹர்ஷ டி சில்வா வெளியிட்டிருக்கிறார் என்றும் தெரிகின்றது.
ரணிலின் ஆட்சியும், கோட்டாபயவின் ஆட்சிக்குச் சளைத்தது அல்ல என்பதுதான் நிலைமை.