Saturday, October 10, 2026

இரகசியம் - பரகசியம் (07.08.2024)


இந்த மிலேனியத்தில் நடைபெற்ற முதல் நான்கு ஜனாதிபதித் தேர்தல்களிலும் ராஜபக்‌ஷக்கள் நேரடியாகப் பங்கு பற்றினர். அவற்றில் மூன்றில் குறிப்பிடத்தக்க பெரு வெற்றிகளையும் அவர்கள் ஈட்டியுமிருந்தனர்.

இப்போது நடக்கவிருக்கும் இந்த மிலேனியத்தின் ஐந்தாவது ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்‌ஷக்கள் பங்குபற்ற மாட்டார்கள் என்றே கருதப்பட்டது. ஆனால் நிலைமை திடீரென மாறிவிட்டது. இந்த ஐந்தாவது தேர்தலிலும் அடுத்த தலைமுறை ராஜபக்‌ஷவான நாமல் களமிறங்கும் சூழ்நிலை வந்துவிட்டது.

மொட்டுக் கட்சியின் சார்பில் கோடீஸ்வர வர்த்தகர் தம்மிக்க பெரேராவே களம் இறங்குவார் எனக் கடைசி நேரம் வரை பேச்சடிபட்டது.

ஆனால் அவரது வர்த்தகத்துக்கு - வர்த்தக சாம்ராஜ்யத்துக்கு - திட்டமிடப்பட்ட வகையில் ஆப்படிக்கப்படும் என சம்பந்தப்பட்ட வட்டாரங்களில் சுட்டிக் காட்டப்பட்டமையை அடுத்து, தமது வர்த்தகக் கட்டமைப்பைக் காப்பாற்றுவதற்காகக் கடைசி நேரத்தில் களத்தில் இருந்து அவர் பின்வாங்கி இருக்கின்றார்.

நாமலின் வேட்பாளர் வருகை மொட்டு கட்சியினர் இடையே ஒரு புத்துணர்வை ஏற்படுத்தும் என்று கட்சி வட்டாரங்கள் நம்புகின்றன.

நாமலின் நோக்கம் வெற்றி இலக்காக இல்லாவிட்டாலும், கட்சியை மீண்டும் வலுவான சக்தியாகக் கட்டி எழுப்புதல்தான் என்று அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

மொட்டுக் கட்சியிலிருந்து ரணிலுக்கு ஆதரவாக அந்தப் பக்கத்துக்கு பாய்ந்திருக்கும் தரப்புகளின் வேகத்தில், நாமலின் வேட்பாளர் வருகை சில பின்னடைவுகளை ஏற்படுத்தி இருப்பதாகவும் தெரிகின்றது. நாமலுக்கு எதிராக - ரணிலுக்கு ஆதரவாக - பலர் பகிரங்க வெளியில் இறங்குவதைத் தவிர்ப்பர் என்றும் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

நாமலுக்கான தேர்தல் வேலைகளைக் கவனிக்கவும், பின்புலத்திலிருந்து விடயங்களைக் கையாளவும் பசில் ராஜபக்‌ஷ இணங்கி இருக்கின்றார் என்றும் தெரிகின்றது.

நாமலின் வேட்பாளர் வருகை அரசியல் கள நிலைவரங்களில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தப் போகின்றது என்பது அடுத்து வரும் நாள்களில் ஓரளவு தெரிந்து விடும் என எதிர்பார்க்கலாம்.

************

நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கு இடையில் பயணிகள் சேவையில் ஈடுபடவிருக்கும் 'சிவகங்கை' பயணிகள் கப்பல் உரிய மாற்றங்கள்இ திருத்தங்கள், தயாரிப்புகள், சான்றிதழ்களுடன் சேவைக்குத் தயாராக நேற்று நாகப்பட்டினம் துறையை வந்தடைந்துள்ளது.

நாளை அது நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்குப் பரீட்சார்த்த பயணத்தை மேற்கொண்டு உடனடியாகவே அன்றே நாகை திரும்பவிருக்கின்றது எனவும் தெரிகின்றது.

அடுத்த வாரம் முதல் அது பயணிகள் சேவையை தினசரி நடத்தும். அது பற்றிய விவரங்கள் ஓரிரு தினங்களில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிகின்றது.

you may also like