Saturday, October 10, 2026

இரகசியம் - பரகசியம் (07.04.2024)


சரித்திரம் திரும்புகின்றது என்று நினைக்கிறேன்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிதாமகர் - ஆசிய அரசியலில் மூத்த கிழட்டு நரி என கருதப்பட்டவர் - முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன. அவரே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் குரு. சொந்த மாமனும் கூட.

United National Party (ஐக்கிய தேசியக் கட்சியின்) சுருக்கத்தை - UNP என்பதை -

Uncle - Nephew Party (மாமன் - மருமகன் கட்சி) என்று கிண்டலாக முன்னர் அழைப்பதுண்டு.

மாமன் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமை வகித்த கட்சியை இப்போது மருமகன் ரணில் விக்கிரமசிங்க முப்பது ஆண்டுகளாகத் தலைமை வகித்து நடத்துகின்றார். அதனால் இது மாமன் - மருமகன் கட்சிதான்.

ஐக்கிய தேசிய கட்சியைப் பொறுத்தவரை காலங்காலமாக அதன் பிரதான எதிர்க்கட்சி சுதந்திரக் கட்சியே. அதுவே அதன் பரம வைரிக் கட்சி.

அந்த சுதந்திரக் கட்சிக்குத் தான் ஜனாதிபதியானதும் ஜே.ஆர். என்ன செய்தாரோ அதனையே அவரது அரசியல் வாரிசு ரணிலும் இப்போது செய்கின்றார்.

கொழும்பு மருதானை டார்லி வீதியில் உள்ள சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தை பொலிஸார் நேற்று மூடி சீல் வைத்தனர். கட்சியினர் யாரையும் உள்ளே செல்ல அவர்கள் அனுமதிக்கவில்லை.

இதே வேலையைத்தான் ரணிலின் மாமனார் ஜே.ஆர். முன்னர் ஜனாதிபதியாக இருந்து செய்தார்.

அது நடந்தது - என் நினைவு சரி என்றால் - 1982 ஆக இருக்கலாம். அப்போது நான் 'தினபதி' - 'சிந்தாமணி' பத்திரிகைகளின் நீதிமன்றச் செய்தியாளன்.

எதிர்க்கட்சியான சுதந்திரக் கட்சிக்குள் பிளவு. கட்சித் தலைவி சிறிமாவோ மற்றும் செயலாளர் சூரியாராய்ச்சி (என்று எனக்கு நினைவு) போன்றோர் ஓர் அணி.

மற்றப் பக்கத்தில் சிறிமாவோவின் மகன் அநுரா பண்டர்நாயக்க, மைத்திரிபால சேனநாயக்க, ஸ்டான்லி திலகரட்ன போன்றோர். கட்சிக்குள் இப்போது இருப்பது போல உள் வீட்டு குழப்பம். யார் கட்சியின் உண்மையான தலைவர் என்று இழுபறி.

கட்சித் தலைமையக வாசலில் ஒரு நாள் காலை வேளையில் யாரோ ஒரு கிரனேட்டை வீசி வெடிக்க வைத்தனர். யாரும் காயமடைந்தனரா என்பது எனக்கு நினைவில் இல்லை.

கிரனேட் வீச்சு நடவடிக்கை கூட ஜே.ஆரின் வேலை என்றுதான் அப்போது பேசப்பட்டது. கிரனேட் வீச்சைக் காரணம் காட்டி, அதனால் பொது அமைதிக்கு பங்கம் என்று விளக்கம் கூறி, சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தை சீல் வைத்து மூடினர் பொலிஸார். திறப்பை எடுத்துச் சென்று மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

இந்தத் திறப்பை மீளப் பெறுவதற்கான சட்டச் சர்ச்சை கீழ்நிலை நீதிமன்றங்களில் இருந்து மேல்நிலை நீதிமன்றங்கள் வரை சு.கவின் இழுபறியாகத் தொடர்ந்தது. அவை பற்றிய நீதிமன்ற செய்திகளை சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் நான் பரபரப்பாகச் சேகரித்து வழங்கினேன். எமது பத்திரிகையில் தலைப்புச் செய்தியாக அவை பிரசுரமான நினைவு எனக்கு இப்போதும் உண்டு.

இப்போது கட்சி அலுவலகத்தில் இருந்து சில ஆவணங்கள் காணாமல் போயின என்ற விடயத்தை வைத்து பொலிஸாரைக் கொண்டு அலுவலகத்தை மூடி சீல் வைத்திருக்கின்றார் ஜே.ஆரின் மருமகன் ரணில்.

அன்று சிறிமாவோவுக்கு ஏற்பட்ட நெருக்கடி இன்று மைத்திரிக்கு.

பௌத்த - சிங்களப் பேரினவாதப் போக்குக் கொண்ட அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷவை வெளியில் இருந்து கூட்டி வந்து கட்சி அலுவலகத்தில் அண்மையில் கூட்டம் வைத்தார் மைத்திரியார். தமது தலைமையில் அமையும் புதிய அரசியல் கூட்டணியின் சார்பில் விஜயதாஸ ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராகக் களம் இறக்கும் முனைப்புடன் அவர் இந்த விடயங்களை முன்னெடுத்தார். விஜயதாஸ ராஜபக்‌ஷ பேரினவாதச் சிந்தனைப் போக்கு உடையவர். அதனால் பௌத்த பிக்குகளின் பெரும் நம்பிக்கையையும் ஆதரவையும் பெற்றவர். அதனால் அந்தக் கூட்டை ஆதரிக்க விமல் வீரவன்ஸ உட்பட ஏனைய பேரினவாத அணியினரும் தயாராகினர்.

மைத்திரியின் இந்த அரசியல் காய் நகர்த்தலே அவருக்கு இப்போது பேரடியாகவும் பேரிடியாகவும் விடயங்கள் அடுத்தடுத்து அரங்கேற வழி செய்திருக்கின்றன. சந்திரிகா தலைமையில் கட்சிக்குள் ஒரு குழு கிளர்ந்தெழவும் இந்தப் போக்கே எண்ணை வார்த்தது.

அவை பற்றிய விவரங்களைப் பின்னர் ஒரு நாள் விலாவாரியாகப் பார்ப்போம். 

you may also like