Saturday, October 10, 2026

ஜனநாயக உரிமைகளை மீறுகின்றது ரணில் அரசு: ஆஸி. தூதுவரிடம் சஜித் சுட்டிக்காட்டு


இலங்கைக்கான ஆஸ்திரேலியத் தூதுவர் போல் வெஸ்லி ஸ்டீபன்ஸுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று நடைபெற்றது.

இதன்போது இலங்கையின் தற்போதைய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

2024 ஆம் ஆண்டுக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஆஸ்திரேலியத் தூதுவருக்கு எடுத்துரைத்தார்.

2023ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகளை உரிய முறையில் பூர்த்தி செய்ய முடியாத நிலையிலேயே 2024 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது என்றும், மக்கள் தரப்பில் இருந்து நோக்கும் போது இது பாதகமான வரவு - செலவுத் திட்டம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

அத்துடன், தற்போதைய அரசு மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறித் தேர்தலைத் தொடர்ச்சியாக ஒத்திவைத்துள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர், ஆஸ்திரேலியத் தூதுவரிடம் எடுத்துரைத்தார்.

ஆஸ்திரேலியப் பிரதித் தூதுவர் திருமதி லலிதா கபூர், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன மற்றும் நிரோஷன் பெரேரா ஆகியோரும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். 

you may also like