Friday, October 9, 2026

இரகசியம் - பரகசியம் (03.04.2024)


சட்டங்கள், ஒழுங்கு விதிகளை மீறி, மதுபானசாலைகளைத் திறப்பதற்கான உரிமங்கள் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்கள் பலருக்கும் எண்ணுக்கணக்கின்றி அள்ளி வீசப்படுகின்றன, தேர்தல் செலவினத்தை எதிர்கொள்வதற்கான மார்க்கம் என்ற பெயரில் இந்தப் புதிய சந்தை திறந்து விடப்பட்டிருக்கின்றது என நேற்று இப்பத்தியில் சுட்டிக்காட்டி இருந்தேன்.

இவ்விடயத்தை ஒட்டிய விவகாரம் உயர்நீதிமன்றத்தில் நேற்று பரிசீலனைக்கு வருகின்றது, உயர் நீதிமன்றம் அரசியல் தலைமைகளுக்கு மறைமுகமாகக் குட்டு வைக்கும் விதத்தில் இடைக்காலத் தடை உத்தரவை விடுக்க வாய்ப்பு உண்டு என்று நேற்று இப்பத்தியில் எதிர்வு கூறியிருந்தேன். அதேபோன்று இடைக்கால தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

நான் எதிர்வு கூறியது நடந்திருக்கின்றது. அதுவல்ல விடயம். இவ் விவகாரத்தை ஒட்டி நேற்று உயர் நீதிமன்றத்தில் அரங்கேறிய நாடகம்தான் கவனிக்க வேண்டிய அம்சம்.

கடந்த வருடத்தில் உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க நமது அரசியல் கிழட்டு நரியான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கையாண்ட தந்திரம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

உள்ளூராட்சித் தேர்தலை நடத்தும் முழு அதிகாரமும் தேர்தல் ஆணைக்குழுவுக்கே உரியது. ஆனால் தாம் நிதி அமைச்சர் என்ற முறையில் தேர்தலுக்கான செலவினத்துக்குரிய நிதியை வழங்காமல் வெட்டுவதன் மூலம் அந்தத் தேர்தலுக்கு ஆப்படித்தார் நிதி அமைச்சருமான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

இந்த விடயம் நீதிமன்றுக்குச் சென்றதும் நீதித்துறையை அச்சுறுத்தி அடக்கும் ஒரு காய் நகர்த்தல் அவர் பக்கத்தில் இருந்து புறப்பட்டது.

நிதி அமைச்சர் என்ற முறையில் நிதி ஒதுக்கீடுகளை செய்வது நாடாளுமன்றத்திற்குப் பதிலளிக்க வேண்டிய விடயம், நாடாளுமன்றத்தின் சார்பில் நிதி அமைச்சர் அந்தக் கடமையை ஆற்றுகிறார், அதில் வேறு துறைகள் - அமைப்புகள் - தலையிடக்கூடாது, தலையிட முடியாது - என்ற ஒரு செய்தியை பகிரங்க உரையாக வெளியிட்டார் நிதி அமைச்சருமான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

அதாவது, நிதியமைச்சர் என்ற முறையில் நிதி ஒதுக்கீடுகளை செய்வது நாடாளுமன்றத்தின் ஆட்சித் துறை தத்துவம் சார்ந்தது. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது, தலையிடக்கூடாது என்ற எச்சரிக்கைதான் அந்த வடிவத்தில் வந்தது.

அந்த எச்சரிக்கை விவகாரத்தை காப்பரணாக வைத்துத்தான் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த நிதி ஒதுக்கீடு செய்யாமல் அதை இழுத்தடித்து வருகின்றார் ரணிலார்.

அதே பாணி அணுகுமுறை இந்த வழக்கை ஒட்டியும் அரசுப் பக்கத்திலிருந்து நேற்றும் முன்தினமும் வெளிப்பட்டது.

மதுபானசாலை உரிமங்களை வழங்குவதும், விற்பதும், வரி அறவிடுவதும் நாட்டின் அரசினது வருமானம் ஈட்டும் விவகாரம், அது தொடர்பில் நாடாளுமன்றுக்கு உள்ள சிறப்புரிமையில் உயர் நீதிமன்றம் தலையிடக்கூடாது, தலையிட முடியாது, இந்த விடயத்தில் தலையீடு செய்யும் விதத்தில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை செய்யப்படுகின்றது, இது தவறு, ஆகவே இது குறித்து நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழு விசாரணை செய்ய வேண்டும் என்று நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் ஆளும்தரப்பின் எம்.பி. ஒருவர் வலியுறுத்தி உரையாற்றினார். அவரது கோரிக்கையை ஏற்று, அந்த விடயத்தை நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவுக்கு சபாநாயகர் கையளித்துள்ளார் என்று தெரிவிக்கும் செய்தி ஒன்று அரசு பத்திரிகையான 'டெய்லி நியூஸ்' இல் நேற்றுப் பிரசுரமாகியிருந்தது.

நேற்றுப் பிற்பகல் மேற்படி அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மூன்றும் உயர்நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது எதிர்த் தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் அந்தச் செய்தியை நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

இந்த விடயத்தில் நாடாளுமன்றச் சிறப்புரிமை சம்பந்தப்பட்டிருப்பதால், அது பற்றித் தீர்மானிக்க இந்த வழக்கு விசாரணையை நிறுத்தி, விவகாரத்தை ஐந்து நீதியரசர்கள் ஆயத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரி நீண்ட வாதாட்டத்தை அவர் முன் வைத்தார்.

அதாவது இப்படி மதுபானச் சாலை உரிமங்களை வழங்குவதும், அதன் மூலம் வரி மற்றும் அறவீடுகளைப் பெறுவதும் நிதி அமைச்சர் என்ற முறையில் நாடாளுமன்றத்துக்குப் பதிலளிக்க வேண்டிய விடயங்கள், நாடாளுமன்றத்தின் விசேட உரிமை, அதில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று வழக்குக்கு முழுமையாக ஆப்படிக்க முயற்சி எடுக்கப்பட்டது.

மேற்படி மூன்று அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் தாக்கல் செய்த மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகள் எம்.ஏ.சுமந்திரன், சஞ்சீவ ஜெயவர்த்தன, சாலிய பீரிஸ் ஆகியோர் காத்திரமான பதில் சட்ட வாதங்களை முன் வைத்தனர்.

அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இரண்டு மாதங்களில் விசாரித்துத் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது அரசமைப்பு ஏற்பாடு, இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு ஒரு வருடமாகின்றது, ஆறு, ஏழு தவணைகள் விசாரணைகளின் பின்னர் இத்தகைய பூர்வாங்க ஆட்சேபனையை எழுப்புவதை ஏற்கக் கூடாது என்றனர் மூவரும்.

இச்சமயத்தில் அரசு தரப்பில் முன்னிலையான பிரதி சொல்லிஸிட்டர் ஜென்ரல் கனிஷ்க டி சில்வா அம்மையாரின் கருத்தையும் மன்று செவிமடுத்தது.

சட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகளுக்கு முரணாக யாருக்கும் மதுபான சாலை உரிமங்கள் வழங்கப்படவில்லை என்று அவர் கூறியவற்றையும் நீதிமன்றம் பதிந்தது.

வழமைக்கு மாறாக சட்டத்தரணிகளின் முக்கிய வாதங்களை அவர்களின் குரலில் நீதிமன்றம் ஒலிப்பதிவும் செய்தது.

அதன் பின்னர் மன்றின் இடைக்கால உத்தரவு வழங்கப்பட்டது. அது பின்வருமாறு அமைந்தது:-

1. ஐந்து நீதியரசர்கள் முன்னிலையிலான விசாரணைக்கு உத்தரவிடும் அதிகாரம் இந்த மன்றுக்கு இல்லை. அதற்கான விண்ணப்பம் பிரதம நீதியரிடம்தான் சமர்ப்பிக்க வேண்டும். அதனால் அக்கோரிக்கை குறித்து இந்த நீதிமன்று எந்த முடிவும் எடுக்கவில்லை.

2. மேற்படி உரிமங்கள் வழங்குவதற்கு கலால் சட்டங்கள் மற்றும் அவ்வப்போது வெளியிடப்பட்ட கலால் ஒழுங்கு விதிகள் உள்ளன. அவை நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஒழுங்கு விதிகள். ஆகவே அவற்றுக்கு அமைவாக மட்டுமே உரிமங்கள் வழங்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் பணிப்பது நாடாளுமன்றத்தின் சிறப்புரிமையை மீறும் விடயம் அல்ல. மாறாக, நாடாளுமன்றத்தின் உரிமைகளை நடைமுறைப்படுத்தும் - நிலைநாட்டும் - அம்சம்தான்.

3. இந்தச் சட்டங்கள், ஒழுங்கு விதிகளுக்கு மாறாக உரிமங்கள் வழங்கப்படக் கூடாது என இடைக்காலத் தடை விதிக்கின்றோம்.

- இதுதான் நேற்றைய உத்தரவின் சாராம்சம். இனி வழக்கு மீண்டும் மே 10 ஆம் திகதி எடுக்கப்படும்.

இனித்தான் பிரச்சினை இருக்கின்றது.

கலால் ஒழுங்கு விதிகள் மிக இறுக்கமானவை. மத ஸ்தலங்களுக்கு பக்கத்தில், பாடசாலைகளுக்கு அருகில் மதுபான சாலைகளை அமைக்க உரிமங்கள் வழங்கப்படக் கூடாது, ஒருவருக்கு பல உரிமங்கள் வழங்கக் கூடாது என்றெல்லாம் பல விதிமுறைகள் உண்டு. அவற்றை மீறியே இவை இதுவரை காலமும் வழங்கப்பட்டுள்ளன.

இப்படி வழங்கப்பட்ட உரிமங்களின் விவரம் இனி விலாவாரியாக - மீறல் விவரங்களுடன் - நீதிமன்றுக்குப் போக, ஒவ்வொரு உரிமமாக 'அவுட்' ஆகும் சாத்தியங்கள் அதிகம் உண்டு.

இந்த இடைக்கால உத்தரவைப் பெற நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தியவர்களில் முக்கியமானவர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி.

இதில் அவர் பல 'ஸேம் ஸைட் கோல்களை' அடித்திருக்கின்றார். இப்படி பின்கதவால் மதுபான சாலை உரிமங்களை 'பினாமி' பெயர்களில் பெற்று பட்டுவாடா செய்து உழைத்தவர்களில் தமிழ் கூட்டமைப்பின் சகாக்கள் மட்டுமல்லர், தேசியத்துக்காக துதிபாடும் அவரது கட்சியின் சகாக்களும் உள்ளனர் என்று கூறப்படுகின்றது.

ஏற்கனவே கட்சிக்குள் நன்கு வாங்கிக் கட்டியிருக்கும் சுமந்திரன் வெளியே தெரியாத - தெரிவிக்க முடியாத - இந்தக் 'குற்றத்திற்காகவும்' இனி வாங்கிக் கட்டுவார்.

உரிமங்களின் பெயரில் மில்லியன்களைச் சம்பாதித்தோர் நீதிமன்ற இக்கட்டால் திருடனுக்குத் தோள்கொட்டிய மாதிரித் துடித்துப் போவர். ஆனால் அடங்கிவிடார். நிச்சயம் சுமந்திரனுக்கு இதற்காக ஆப்பு உண்டு. அவர் அவற்றை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியதுதான்...!

you may also like