Saturday, October 10, 2026

இரகசியம் - பரகசியம் (03.01.2023)


இன்று இரண்டு சிறிய தகவல்கள் முதலில் வாசகர்களுக்கு.

முதலாவது - நாளை வடக்கே வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இங்கு நான்கு நாள்கள் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கின்றார். அவற்றை முடித்துக் கொண்டு அவர் கொழும்பு திரும்பிய பின்னர் - பெரும்பாலும் 10 ஆம் திகதிக்கு பின்னர் - வன்னி மாவட்டத்தின் தமிழ் எம்.பி. ஒருவருக்கு வன்னியின் ஒரு மாவட்டத்துக்கான இணைப்புக் குழு இணைத்தலைவர் பதவியை வழங்குவார் எனத் தெரிகிறது.

தன்னிடம் அடைக்கலம் தேடி வருவோருக்கு ரணில் தாராளம் காட்டுவார் என்பது உண்மையே!

மற்றைய - விடயம் பெரும் போதைப் பொருள் கடத்தலில் வடக்கு அரசியல் குடும்பத்தின் புத்திரர் ஒருவர் சிக்குண்டமை குறித்து குறிப்பிட்டிருந்தேன் அல்லவா?

அது பற்றிய செய்தியை வாட்ஸ் அப் குரூப் ஒன்றில் பகிர்ந்து கொண்ட தமிழ் அரசு அதிகாரி ஒருவருக்கு சம்பந்தப்பட்ட தரப்புகளில் இருந்து 'செம டோஸ்' கொடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல். அரண்டு போயிருக்கிறார் அந்த அதிகாரி.

அடுத்தது - தென்னிலங்கை அரசியல் தகவல் ஒன்று.

'ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம். இறங்கச் சொன்னால் முடவனுக்கு கோபம்' என்பார்கள்.

அந்த மாதிரி, புது அரசியல் கூட்டணி அமைப்பதில் அல்லாடுகின்றார் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ.

மொட்டுக் கட்சிக் கூட்டிலிருந்து பிரிந்து, டலஸ் அழகப்பெருமா தலைமையில் செயற்பட்ட அணியிலிருந்து இப்போது நான்கு எம்.பிக்கள் சஜித் தரப்புக்குப் பாய்கின்றனர். - இது பழைய செய்தி. டலஸ் அழகப்பெருமா தலைமையிலான சுதந்திர ஜனதா சபையிலிருந்து பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பேராசிரியர் சன்ன ஜயசுமண, கலாநிதி நாளக கொடஹெவா, டிலான் பெரேரா ஆகிய நால்வருமே வெளியேறி சஜித் பக்கம் பாய்கின்றனர். இவர்களில் கலாநிதி நாளக கொடஹெவா, பேராசிரியர் சன்ன ஜயசுமண ஆகியோர் சஜித் அணியில் சேர்வதை ஏற்கனவே சஜித் அணியிலுள்ள முஸ்லிம் தரப்புகள், கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன என்று தகவல்.

இவர்கள் இருவரும் - கலாநிதி நாளக கொடஹேவா மற்றும் பேராசிரியர் சன்ன ஜயசுமண இருவரும் - முன்னர் போட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்த போது அவருக்கு இடது, வலது கைகள் போல மிக நெருக்கமாகச் செயற்பட்டவர்கள்.

பௌத்த - சிங்களத் தீவிரப் போக்குக் கொண்ட இவர்களின் 'புத்திசாலித்தனம்' காரணமாகவே முன்னர் உயிரிழந்த கொவிட் தொற்றாளர்களின் உடலங்களைப் புதைக்க முடியாது, எரிக்க வேண்டும் என்று கோட்டாபய கடும் நிலைப்பாடு எடுத்து, முஸ்லிம்களின் ஜனாஸாக்களையும் எரிக்க வைத்தார் என்று முஸ்லிம் எம்.பிக்கள் கருதுகின்றனர்.

இந்த இருவரையும் சஜித் பிரேமதாஸ தமது அணியில் இணைத்தால், ஹக்கீம், ரிஷாத் தரப்புக்கள் ரணில் விக்கிரமசிங்கவின் அணியில் சேர்ந்து விடும் என்கின்றன விடயமறிந்த வட்டாரங்கள்.

பாவம்...சஜித்! தீர்மானம் எடுக்க முடியாமல் அல்லாடுகின்றாராம்...!

you may also like