- by Editor
- 1 year ago
யாழ். பல்கலைக்கழக வெசாக் கூடு சேத விவகாரம் - வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என பீடாதிபதி அவசர வேண்டுகோள்
-
- by Editor,
- 4 months ago
- in இலங்கை செய்திகள்
யாழ் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிகப் பீடத்தில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் அலங்காரக் கூடு சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தேவையற்ற மற்றும் இன நல்லுறவை பாதிக்கும் வகையிலான பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என பீடாதிபதி என். கெங்காதரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த மே 31 ஆம் திகதி நள்ளிரவு, பீட வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் அலங்காரம் இனந்தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்கலைக்கழகத்தில் அனைத்து இன மற்றும் மத மாணவர்களும் ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதையுடன் கல்வி கற்று வருவதாக பீடாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களின் மத மற்றும் கலாசார நிகழ்வுகளுக்கு வழமையாக அனுமதி வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, பௌத்த மாணவர்களின் கோரிக்கைக்கு அமைவாக மே 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் வெசாக் நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. நிகழ்வுகள் அமைதியான முறையில் நடைபெற்றதாகவும், பின்னர் இரவு நேரத்தில் முகங்களை மறைத்திருந்த இருவர் மதில் வழியாக வளாகத்திற்குள் நுழைந்து அலங்காரங்களை சேதப்படுத்தியதாகவும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவதானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவர்களைத் துரத்திச் சென்றபோதும், அவர்கள் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் சம்பவம் தொடர்பில் உடனடியாக நிர்வாகத்திற்கும், கோப்பாய் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் உத்தியோகபூர்வ முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்தில் தொடர்புடையவர்களை அடையாளம் காணும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ் மற்றும் சிங்கள மாணவர்களுக்கிடையிலான நல்லுறவை பாதிக்கும் வகையில் சில தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், பல்கலைக்கழகத்தின் சுமுகமான சூழலைக் குழப்பும் நோக்கில் இந்தச் செயல் இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் பீடாதிபதி தெரிவித்துள்ளார்.
மாணவர்களிடையே நல்ல புரிந்துணர்வும் ஒற்றுமையும் தொடர்ந்தும் நிலவுவதாகக் குறிப்பிட்ட அவர், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருவதால், உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பரப்புவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.