Saturday, October 10, 2026

நான்காவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு கோரிய பெண் ஊழியரின் மனு நிராகரிப்பு


நான்காவது குழந்தையைப் பிரசவிக்கவுள்ள நிலையில், சட்ட விதிகளின்படி தனக்கு மகப்பேறு விடுப்பு வழங்குமாறு கோரி இந்திய அரச பெண் ஊழியர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

சசி குமாரி என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை விசாரித்த நீதிபதி மஞ்சு ராணி சவுகான், அதனைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

தனது நான்காவது குழந்தைக்கான மகப்பேறு விடுப்பு கோரிக்கையை நிராகரித்து சம்பல் பிராந்தியக் கல்வி அதிகாரி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சசி குமாரி மேல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

சட்ட விதிகளின்படி தனக்கு ஆறு மாத கால மகப்பேறு விடுப்பு வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.

வழக்கு விசாரணையின்போது, நடைமுறையில் உள்ள விதிகளின்படி நான்காவது குழந்தைக்காக மகப்பேறு விடுப்பு பெறுவதற்கு மனுதாரருக்கு உரிமை இல்லை என அரசாங்கத் தரப்பு சட்டத்தரணி வாதிட்டுள்ளார்.

எனினும், தனது முதல் மூன்று குழந்தைகளின் பிறப்பின்போதும் தான் மகப்பேறு விடுப்பு பெற்றிருக்கவில்லை என்றும், தற்போதுதான் முதன்முறையாக மகப்பேறு விடுப்பு கோருவதாகவும் மனுதாரர் தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி, மனுதாரர் ஏற்கனவே மகப்பேறு விடுப்பு பெற்றிருந்தமை தொடர்பான சான்றுகளை அரசாங்கத் தரப்பு முன்வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனால், குறித்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடுவதற்கான அவசியம் இல்லை எனத் தெரிவித்த நீதிபதி, சசி குமாரி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

you may also like